ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் கொடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியிடம் மட்டுமே தொகுதி பங்கீடு குறித்து 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மற்ற கட்சிகளுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றாலும், மறைமுகமாக பேசி வருகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே தங்கள் சின்னத்தில் நிற்கவும் மற்ற கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.
இதற்கு ஒரு சில கட்சிகள் இசைவு கொடுத்துவிட்டன. ஒன்றிரண்டு இடங்களில் போட்டியிடக்கூடிய கட்சிகள் சம்மதம் தெரிவித்துவிட்டன.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘‘தான் ஆரம்பத்தில் இருந்தே தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம், எங்களுடைய சுதந்திரத்தில் தி.மு.க. தலையிடாது’’ என்றும் கூறினார். இந்தநிலையில் தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் இன்று மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ம.தி.மு.க.வுடன் 5 மணிக்கும், விடுதலை சிறுத்தையுடன் 7 மணிக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை 10 தொகுதிகளை கேட்கிறது. 25 விருப்ப தொகுதிகளையும் பட்டியலிட்டு கொடுத்துள்ளது. செய்யூர், கரூர், திண்டிவனம், வானூர், காட்டுமன்னார் கோவில், திட்டக்குடி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்துகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடம் என்பது முக்கியமல்ல. கேட்கும் தொகுதிகளைக் கொடுங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரிடமும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க திமுக, அதிமுக தலைமையில் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணிக் கட்சிகளுக்குக் கிள்ளிக் கொடுக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடும் நிலையில், அதிமுகவும் கிட்டத்தட்ட அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
வாக்குகள் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் பெரிய கட்சி என்றால் பாமக, அடுத்து தேமுதிக அடுத்து பாஜக வரும். ஆனால், மத்தியில் ஆளுகின்ற பெரிய கட்சி என்கிற அடிப்படையில் பாஜக தமிழகத்தில் அதிமுகவிடம் அதிக இடம் கேட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் முடிவு செய்வோம் என பாஜக தலைவர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தம் கட்சிக்கு அதிக இடங்கள் வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது. அதேசமயம் அதிமுக 170 இடங்களுக்கு மேல் நின்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கூட்டணிக் கட்சிகளையும் விட்டுவிட மனமில்லை. இந்நிலையில் பாமகவின் கோரிக்கையான வன்னியர் உள் ஒதுக்கீட்டை நிறைவேற்றி பாமகவை 23 தொகுதிகளுக்குள் நிறுத்திய அதிமுக தலைமை, பாஜகவை 20 தொகுதிகளில் நிறுத்தத் திட்டமிட்டு இயங்கியது.
ஆனால், பாஜகவின் தேசிய தலைமை நெருக்குதல் காரணமாக அந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் மற்றும் புதுவைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவரை இரவு 10.30 மணி அளவில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்தித்தனர். உடன் ரவீந்திரநாத் எம்.பி.யும், பாஜகவின் அமைப்பு தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷும் உடனிருந்தனர்.