தமிழ் பெண்களை சுய இன்ப அரசியலுக்கு பயன்படுத்துகின்ற நடவடிக்கைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக முடிவுறுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்க தலைவர் எஸ். லோகநாதன் ஆகியோர் கூட்டாக விடுத்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அக்கரைப்பற்றில் உள்ள தமிழ் பிரதேசமான ஆலையடிவேம்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் கிளை அலுவலகம் ஒன்று கட்சி சார்ந்த அரசியல் செயற்பாட்டுக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக இவர்கள் விடுத்து உள்ள கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளவை வருமாறு:-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அமைப்பாளர் கடந்த தினங்களில் ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கு வருகை தந்து உள்ளார். இவர் அடங்கலாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரின் பிரசன்னத்துடன் இக்கட்சியின் மகளிர் கிளை அலுவலகம் நிறுவப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அபிவிருத்தி என்கிற மாயையை காட்டி, சலுகை என்கிற எலும்பு துண்டை வீசி ஆலையடி பிரதேசத்தை சேர்ந்த தமிழ் பெண்கள் பலரையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குள் உள்ளீர்த்து உள்ளார்கள். இதை ஒரு மிக பிழையான அரசியல் அணுகு முறையாக கண்டு வன்மையாக கண்டிக்கின்றோம்.
மேலும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் எவையும் கடந்த காலங்களில் தமிழ் பெண்களை முன்னிறுத்தி கட்சி அரசியல் செய்தது இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை மிக திட்டமிடப்பட்ட வகையில் இவரை தவிர வேறு எந்த முஸ்லிம் தலைவர்களும் அண்மைய காலங்களில் கோரியதும் கிடையாது. முஸ்லிம்களை பொறுத்த வரை அக்கரைப்பற்று தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவின் கோட்டை ஆகும். அதாவுல்லா இது வரையில் தமிழர்களின் வாக்குகளை இலக்கு வைத்து அரசியல் செய்தது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதாவுல்லா சில மாதங்களுக்கு முன்னர் தேசிய காங்கிரஸை வன்னிக்கு விஸ்தரிப்பு செய்தார். தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளராகவும், மகளிர் பொறுப்பாளராகவும் ஜான்சிராணி சலீம் என்கிற அரசியல் செயற்பாட்டாளரை நியமித்தார். வன்னியில் அமைச்சர் றிசாத் பதியுதீனை மழுங்கடிப்பதை நோக்கமாக கொண்டே அதாவுல்லா இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார் என்று அரசியல் அரங்கில் பரவலாக பேசப்படுகின்றது. இதற்கு அதே பாணியில் பதிலடி கொடுக்கின்ற வகையிலேயே றிசாத் பதியுதீன் மகளிர் அமைப்பாளர் ஒருவரை நியமித்து அக்கரைப்பற்றுக்கு அனுப்பி வைத்து உள்ளார் என்று தெரிகின்றது. ஆகவே அதாவுல்லாவின் அக்கரைப்பற்று கோட்டையை தகர்க்கின்ற நடவடிக்கையின் ஒரு அம்சமாகவே இவர் ஆலையடிவேம்பில் உள்ள தமிழ் பெண்களை பயன்படுத்த முயல்கின்றார் என்பது வெளிப்படை ஆகும். றிசாத் பதியுதீனுக்கும் அதாவுல்லாவுக்கும் இடையிலான அரசியல் பகைமைக்கு தமிழர்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுவதை நாம் ஏற்க முடியாது அதாவுல்லாவை ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கோபம் அடைய வைக்கின்ற சூழ்ச்சியை றிசாத் பதியுதீன் கைக்கொள்கின்றார் என்கிற சந்தேகமும் எமக்கு வலுவாகவே உள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த தமிழ் பெண்கள் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஊட்டியுள்ள மயக்க மருந்தில் இருந்து உடனடியாக மீட்கப்பட வேண்டும். இப்பெண்கள் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபட விரும்புகின்ற பட்சத்தில் தமிழ் கட்சிகள் மூலமாக இவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க நாம் தயாராகவே உள்ளோம். மேலும் தேர்தலில் 25 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்கிற சட்ட ஏற்பாடு கொண்டு வரப்பட்டு உள்ள நிலையிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவர்களுக்கு வலை வீசி உள்ளது என்பதையும் காரியம் நடந்த பின்னர் இவர்களை கறிவேப்பிலையாக கசக்கி வீசி விடும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.