இது தொடர்பாக அவர் இன்று (22) விடுத்துள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த ஜனாதிபதித்தேர்தல், தமிழ்மக்களுக்கு ஒரு படிப்பினையைத் தந்துள்ளது. 30வருடகால யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள், இறுதியுத்தம் நடந்த நேரத்தில் நடந்தேறிய அவலங்கள், தொடர்ந்து யுத்தம் நடந்து முடிந்து 10வருடங்ளுக்கு மேலாகியும் எமது மக்களின் அபிலாசைகள், எதிர்பார்ப்புகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் போன்றவற்றில் நாம் கண்ட பலாபலன்கள் என்ன? ஏன் எதுவும் முறைப்படி நடக்கவில்லை! இனியாவது சிந்திப்போமா?
“எமது மக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட மாறிமாறிவந்த அரசுகளால் தட்டிக் கழிக்கப்பட்டன. சர்வதேச சமூகம் கண்டுகொள்ளவேயில்லை. இவைகளை முறைப்படி தட்டிக்கேட்பதற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பு கிடையாது என்பதே முக்கியமான காரணமாகும்.
“2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் நியமனப் பத்திரத்தைக் கையளிக்கும்போது, விடுதலைப் புலிகளின் சார்பிலேயே கையளிக்கின்றோம் என திருவாளர். சம்பந்தன் திருவாய் மலர்ந்தருளினார். அதன்மூலம் விடுதலைப் புலிகள் ஜனநாயக அமைப்புக்குள் வந்தார்களா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டதா? என்பது இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஒரு குழப்பமான நிலையை உருவாக்கிவிட்டது.
“2004 – 2009 வரை இறுதியுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் நடந்த படுகொலைகள், ஆள்கடத்தல்கள், சிறுவர்களை யுத்தத்தில் இணைத்தல் போன்றவற்றில் கூட்டமைப்பு பாராமுகமாய் இருந்தது. அதுமட்டுமல்ல அதில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 40,000 சவப்பெட்டிகளை வடக்கிலிருந்து அனுப்புவோம் எனக் கூறியிருந்தார். இவைகளை கூட்டிக்கழித்து கணக்குப் போட்ட சர்வதேச சமூகமும், இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உள்வாங்கப்பட்டு அவர்களின் கொள்கைகளுக்கு ஏதுவாக செயற்படுகிறார்கள் என்ற முடிவுக்கு வந்தன.
“அதனால்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டபோது, கூட்டமைப்பின் குரல்கள் விடுதலைப் புலிகளின் குரல்களாகவே சர்வதேச சமூகத்தாலும் இலங்கை அரசாலும் பார்க்கப்பட்டன. இல்லாவிடில் 1987ஆம் ஆண்டு வடமாராட்சித் தாக்குதலின்போது பதவிகளைத் துறந்துவிட்டு வெறுமனேயிருந்த அமரர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் குரலுக்கு செவிசாய்த்து அன்றைய இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடியாக விமானத்தில் உணவுப்பொதிகளை வழங்கி தமிழர்களுக்கு நாங்கள் இருக்கின்றோம் என்று உதவிக்கு வந்தன. ஆனால், இந்திய அரசு முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது கண்டும் காணாமல் இருந்தது ஏன்? தமிழர் விடுதலைக் கூட்டணியின் குரல் ஒரு ஜனநாயக குரலாக பார்க்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரல் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு அமைப்பின் குரலாகவே பார்க்கப்பட்டது இதுவே யதார்த்தமான உண்மை!
“2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 49மூ% சிங்கள மக்கள் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் சமஷ்டி முறையான அமைப்பை ஏற்று ஆதரவாக வாக்களித்தார்கள். அன்று கூட்டமைப்பு தமிழ்மக்களை வாக்களிக்காது தடுத்து, பகிஷ்கரிக்க கோரியது தமிழ் மக்களுக்குச் செய்த மிகப் பெரிய துரோகமும் வரலாற்றுத் தவறுமாகும்.
“2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளை பூண்டோடு அழித்து விட்டேன் என்று கொக்கரித்த சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்கக்கோரி தமிழ் மக்களுக்கும், தங்களின் தியாகங்கள் மூலம் பதவிகளை பெற்றுக் கொடுத்த விடுதலைப் புலிகளுக்கும் மீண்டும் துரோகம் செய்தார்கள்.
“2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நல்லிணக்க அரசில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டு அளவுக்கு மிஞ்சிய சலுகைகளை அனுபவித்துவிட்டு, தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்யாது மைத்திரிபால சிறிசேனா எங்களை ஏமாற்றிவிட்டார் என்று சோரம்போனார்கள்!
“2019ல் சஜித் பிரோமதாசாவுக்கு வாக்களிக்கக்கோரி, வீர வசனங்கள் பேசி, அன்று சமஷ்டியை ஏற்று வாக்களித்த சிங்கள மக்கள், நாம் இனி எவருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று ஒரு பக்கம் சார்ந்து வாக்களித்து விட்டார்கள். இதன்மூலம் தமிழ்மக்களை மேலும்மேலும் அனாதைகள் ஆக்கி நட்டாற்றில் விட்டுவிட்டார்கள். இதுதான் கூட்டமைப்புச் செய்த இமாலய சாதனை! இனியாவது சுயநலம் கொண்டு பதவிகளுக்காக சோரம்போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வார்த்தை ஜாலங்களுக்கு மயங்காது, அனைவரும் சிந்தித்துச் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்” என்று அவருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.