தமிழ் மக்கள் பேரவையின் ஊர்வலத்தில் தமிழரசுக்கட்சி, வணிகர் கழகம் பங்கேற்காது தமிழர் விடுதலைக் கூட்டணி ஒத்துழைப்பு

தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் 24 ஆம் திகதி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள ஊர்வலத்திற்கு ஆதரவு வழங்க முடியாது என இலங்கைத் தமிழரசுச் கட்சி அறிவித்துள்ளது.பன்நாட்டுச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் புதிய அரசமைப்பு உருவாக்கம் இந்த ஆண்டு இடம்பெறும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்த போது அதனை நையாண்டி செய்த தரப்புக்களுடன் இணைந்து செயற்படும் ஓர் அமைப்பு மேற்கொள்ளும் ஊர்வலம். எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கும் போது இது நடக்காது அல்லது இதில் பிரயோசனம் இல்லை என்று எதிர்த்துவிட்டு பின்பு அதையே கோருவதன் மூலமாக முன்னர் நாம் எடுத்த நிலைப்பாடு சரியென நீங்கள் ஆமோதிப்பதாகவே கொள்ளவேண்டியுள்ளது. மேலும் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கும் நாம் இந்த ஊர்வலத்தில் பங்கெடுப்பது இரட்டை நிலைப்பாடாக பன்நாட்டு சமூகம் பார்ப்பதற்க இடமளிக்கும் எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளனர்.


தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தமிழரசுச் கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரும் தமிழ் மக்கள் பேரவை சார்பில் மருத்துவர்களான பூ.லக்ஸ்மன், சி.சிவன்சுதன் மற்றும் பாலமுரளி பங்குத்தந்தை ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாண வணிகர் கழகமும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்காது என அதன் தலைவர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். வர்த்தக நிலையங்களை பூட்டுவதற்கான ஏற்பாட்டினை வணிகர் கழகம் ஊடாக மேற்கொள்ள முடியாதெனவும் வணிகர்கள் சுயமாக முடிவெடுத்து செயற்படலாம் எனவும் அவர் தமிழ் மக்கள் பேரவை சார்பில் வணிகர் கழகத்தை அணுகியவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த எழுக தமிழ் ஊர்வலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் இரா. சங்கையா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். நல்லாட்சி என்ற பெயரில் தமிழ் மக்களை மறந்து ஆட்சி செய்பவர்களின் கண்களை திறக்கச் செய்ய இந்த ஊர்வலம் அழுத்தம் கொடுக்கும். நாம் அனைவரும் எமக்குள் இருக்கின்ற காழ்ப்புணர்ச்சிகளை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒற்றுமையுடன் செயற்பட முன்வர வேண்டும் அப்போது தான் எம் மக்களின் விடிவிற்கு வழி கிடைக்கும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.