தமிழ் மக்கள் பேரவை கொண்டுள்ள எண்ணங்கள், கொள்கைகள் கொண்ட யார் வேண்டுமானாலும் இதில் இணைந்து செயற்பட முடியும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சரும் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். ‘இங்கு யாரும் பின்வாசலால் வரவில்லை அனைவரும் முறையாக அழைக்கப்பட்டு முன்வாசல் வழியேதான் வந்தார்கள். எனவே, சுமந்திரனும் விரும்பினால் இந்த அமைப்பில் இணையலாம். அவர் தனது நிலைப்பாட்டை எம்மிடம் வெளிப்படுத்துவாரேயானால் நாம் அவருக்கும் அழைப்பு விடுப்போம்’ என்று முதலமைச்சர் கூறினார்.
மேற்படி பேரவையின் இரண்டாம் அமர்வு, யாழ். பொது நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (27)இடம்பெற்றது. இதன் முடிவில் இடம்பெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பின் போது, ‘மக்களால் நிராகரிக்கப்பட்ட கொள்கைகளை சிலர் பின் வாசல் வழியே கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றனர்’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தமை தொடர்வில் முதலமைச்சரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்துதெரிவித்த முதலமைச்சர், ‘இந்த தமிழ் மக்கள் பேரவை தொடர்பான விடயங்கள், செயற்பாடுகள், முன்னகர்வுத் திட்டங்கள் தொடர்பாக என்னிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்து பார்த்ததில் அதில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பானதும் மக்களின் எதிர்கால நிலைத்த நிற்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் செயற்பாடு காணப்பட்டது. ஆகவே, இவைகள் அனைத்தும் வடமாகாண சபையின் செயற்பாடுகளுடன் ஒத்த கருத்துக்களாக காணப்பட்டன. அதன் அடிப்படையில் எனது பங்களிப்பையும் நான் தருவதாக கூறினேன்’ என்றார்.
மேலும், ‘இந்த பேரவையினுடாக வெளிவரும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்வுக்கான பொறிமுறைகள் சர்வதேசத்தினூடாகவோ அல்லது அரசியல் கட்சிகளினூடாகவோ சம்பந்தபட்ட தரப்பிடம் எடுத்து செல்லப்படபோகிறது என்பது இங்கு முக்கியம் அல்ல. இது முழுக்க முழுக்க தமிழ் மக்களின் கரிசனை என்ன, எமது எதிர்கால நிலமைகள் எவ்வாறு அமையபோகிறது என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறுவதற்கான செற்பாடாக அமையும்.
புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெறுகின்றன. இதில் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் எவ்வாறு எந்தளவுக்கு இருக்கும் என்பது தற்போதைய பிரச்சினை. அதனை கவனத்தில் கொண்டு அணுகுவதற்கு இதன் செயற்பாடுகள் இருக்கும். மக்களை ஒன்றிணைத்து அவர்களின் கருத்துகள் உள்வாங்கப்பட்டு அதன் தீர்வுதிட்டங்கள் ஆராயப்பட்டு அதை எவ்வாறு நடமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்’ என்றும் அவர் மேலும் கூறினார்.