வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவையில் இருந்து கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகிய புளொட் விலகவுள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மக்கள் பேரவையில் முதலமைச்சர் இணைந்துள்ளமை தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் புளொட் அமைப்பு அதிலிருந்து விலக முயல்வதாக தெரிகிறது.
தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்க கூட்டத்தில் புளொட் அமைப்பு சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் அவர்களே கலந்து கொண்டார். அதில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்து கொள்ளவில்லை. அதன் பின் தீர்வுத் திட்ட முன்வரைவு முன்வைக்கப்பட்ட போதும் சித்தார்த்தன் கலந்து கொள்வதை தவிர்த்து வெளிநாடு சென்றிருந்தார். இந்நிலையில், அண்மைய நாட்களாக கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் சித்தார்த்தன் தமிழ் மக்கள் பேரவையின் சந்திப்புக்களை தவிர்த்து வருகிறார்.
நேற்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்ட தெளிவுபடுத்தல் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் கலந்து கொள்வார் என ஏற்பாட்டாளர்களால் அழைப்புதழ்களில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதும் அவரோ அல்லது அவரது கட்சி சார்ந்த பிரதிநிதிகளோ எவரும் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை, முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் மீது அண்மையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களும் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.