தமிழ் மக்கள் பேரவை துரோகிகள்- எதிரிகள் கூட்டு -செய்திக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மறுப்பு

எதிரிகள்- துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுலை இயக்கம் (ரெலோ) ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் அந்த இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்.
வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ரெலோவின் தலைமைக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலப்படுத்த அயராது பாடுபடுவோம் என்றும், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஜனநாயக வழியில் போராடி தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை வென்றெடுப்போம் என்றும் அவர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ, புளொட் ஆகிய மூன்று பங்காளிக் கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயற்படவுள்ளன என்று நேற்று சில உள்ளூர் தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியிடம் வினவியபோதே அவர் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தி தமிழ் மக்கள் பேரவையைப் பலப்படுத்தும் நோக்குடன் சில உள்ளூர் தமிழ் ஊடகங்கள் தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளன என்றும், இவ்வாறான செயற்பாடுகள் தமிழினத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகங்கள் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்தவர்களும், தேசியப் பட்டியல் மூலம் தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைக்காதவர்களும் சேர்ந்தே தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியுள்ளார்கள் என்றும், இந்த அமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ரெலோவின் உப தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
எதிரிகள் துரோகிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தத் தமிழ் மக்கள் பேரவையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சேர்ந்து இணைத்தலைமைப் பதவியைப் பெற்றுள்ளமை கவலையளிக்கும் விடயம் என்றும், இது முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வயதிற்கும் அவரின் பக்குவத்திற்கும் அழகல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் அரசியல் நீதி கோரி வந்திருக்கும் எமது மக்களின் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக சக் தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது.
எமது மக்கள் சம்பந்தப்பட்ட சகல பிரச்சினைகள் தொடர்பிலும் மிகக் குறிப்பாக, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்கான குறிக்கோள் தொடர்பிலும், எமது இனத்தின் சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாகவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் காப்பதிலும், அதனை மேலும் பலப்படுத்தி, வலுப்படுத்துவதிலும் நாம் தீவிர அக்கறையும், ஈடுபாடும் கொண்டுள்ளோம்.சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை காரணமாக ஏற்பட்டிருக்கும் நிலைமையை ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவை உடனடியாகக் கூட்டுமாறு அதன் தலைவரான இரா.சம்பந்தனிடம் நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறு இன்றைய பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
செய்திக்கு -பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மறுப்பு-

‘எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை – ஒரு போதும் இணையோம்’ என்ற தலைப்புடன் இன்றைய தினம் (29.12.2015) சுடர் ஒளி, உதயன் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திகளை கண்டு அதிர்ச்சியும், கவலையும் அடைகின்றேன் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

-இவ்விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

‘எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை – ஒருபோதும் இணையோம்’ என்ற தலைப்புடன் அச்செய்தியில் நானும் எமது கட்சியின் உப-தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமும் (ஜனா) கூறியதாக வெளி வந்த செய்தி எம்மால் குறிப்பிடப்படவில்லை.

அது உண்மைக்கு புறம்பானது. இச்செய்தியானது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினதோ அல்லது பெயர் குறிப்பிடபட்டுள்ள எமது கருத்தோ அல்ல என்பதையும் மிகவும் தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

கடந்த 27.12.2015ல் கூடிய எமது கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் தமிழ் மக்கள் பேரவை சம்பந்தமாக கட்சியின் நிலைப்பாட்டை (கட்சியின் செயலாளர் நாயகத்தினால்) ஊடக அறிக்கை மூலமாக தெளிவுபடுத்தி இருந்தோம்.

தமிழ் மக்களின் ஒற்றுமை என்ற பலத்தின் ஊடாகவே எமது அரசியல் உரிமைகளையும், இனப்பிரச்சனைக்கான தீர்வையும் வென்றெடுக்க முடியும் என்ற நிலைப்பட்டில் நாம் உறுதியாக உள்ளோம்.

இந்த நிலையில் எப்படி இந்த வார்த்தையை நாம் பிரயோகித்திருக்க முடியும். இக்கருத்தினை நாம் ஒரு போதும் கொண்டிருக்கவுமில்லை.

இதே வேளை தமிழ் மக்கள் பேரவைக்கு கருணா, டக்ளஸ் போன்றவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது நல்லது என வடக்கு முதலமைச்சரும் பேரவையின் இணைத் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா விடுத்த கோரிக்கை எமக்கு கவலை தருகின்றது. என குறிப்பிடப்பட்டுள்ளது.