“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்” – வெளிநாடு வாழ் தமிழர்கள் புகார்; மத்திய – தமிழக அரசுகள் முரண்பாடு
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களும் தமிழகத்தின் மக்கள் பிரச்சினைகளில் பங்கெடுத்து வருகின்றனர். தமிழக மண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று கடமை உணர்வு இங்கு இருப்போருக்கு மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் இருக்கிறது. இதன் நிரூபணச் செயல்பாடுகள் தற்போது காணக் கிடைக்கின்றன.
அந்த வகையில், குவைத்தில் வாழும் தமிழர்கள் சார்பில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவரும், குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் பொதுச்செயலாளருமான கலீல் பாகவீ என்பவர் தமிழக மற்றும் மத்திய அரசுகளின் பல்வேறு அலுவலகங்களுக்கு புகார் மனுக்களை அனுப்பி உள்ளார். அதில், பல்வேறு விவரங்களை கோரியுள்ள அவர், “தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் அமலுக்கு வந்தால் ஒட்டுமொத்த காவிரி டெல்டா பாசன மண்டலங்கள் பாலைவனமாக மாறிவிடும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் காவிரி டெல்டா பகுதிகள் வறட்சி அடையும். கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் பாதிக்கும்” எனவும் கூறியுள்ளார்.
இந்த மனுக்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, தமிழக அமைச்சகங்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றுக்கு மட்டுமே பதில் கிடைத்துள்ளது.
இதில் முதல்வர் அலுவலகத்தின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட மனுக்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி பதில் பெற்றுத் தரப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட வேளாண்மை, விவசாயத் துறைகள் சார்பில் மார்ச் 16-ல் அளிக்கப்பட்ட பதிலில், தங்களது மனுவின்படி ஹைட்ரோகார்பன் திட்டத்தினை தடை செய்வது அரசின் கொள்கை முடிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கு முரண்படும் வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஜூன் 1-ல் அளித்த பதிலில், ‘விவசாய நிலங்களில் மீத்தேன் எரிவாயு உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு’ எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கடலூர் மாவட்ட பொறியாளர் ச. ரகுபதி, ஜூன் 21-ல் நேரடியாக அளித்த பதிலில், ‘பார்வையில் கண்ட தங்கள் புகார் மனு தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஹைட்ரோ கார்பன் (மீத்தேன்) திட்டத்துக்கான இசைவினை வழங்கவில்லை. இசைவாணை இல்லாமல் இத்திட்டத்தினை செயல்படுத்த முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் வாரியத்திற்கும் புகார் அனுப்பி பதில் பெறப்பட்டுள்ளது. இதில், பிரதமர் அலுவலகம் தமக்கு அனுப்பப்பட்ட புகாரை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு அனுப்பப்பட்ட புகார், தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான புகாருக்கு அளிக்கப்பட்ட பதிலில், ‘அனைத்து வாயு செயல்பாட்டாளர்கள் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் பெறுவது அவசியம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலீல் பாகவீ, “தமிழர்களின் வாழ்வை பாதிக்கும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்திட வேண்டும் என பல தரப்புகளில் எதிர்ப்பு தெரிவித்த போது மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. இதன்மூலம், தமிழக விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மீது தமிழக அரசு எந்தவித அக்கறையும் கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, மத்திய அரசுடன் ஒப்பந்தம் இடப்பட்டுவிட்ட திட்டத்தினை வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் செயல்படுத்த விடாமல் பொது மக்கள் போராட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் மூன்று இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 1, 2018 )ஒப்பந்தம் இட்டது. இதன் டெண்டரில் வேதாந்தா நிறுவனத்துக்கு தமிழகத்தின் 2 இடங்கள் உள்ளிட்ட 41 இடங்கள் கிடைத்துள்ளன. இவை, காவிரி டெல்டா மாவட்டங்களின் பகுதிகள் ஆகும். தமிழகத்தின் 3-வது இடத்தை டெண்டர் எடுத்துள்ள ஓஎன்ஜிசி ஹைட்ரோகார்பன் எடுக்கும் இடம் சிதம்பரம் எனத் தெரியவந்துள்ளது. இதற்கான அலுவலகம் புதுச்சேரியின் காரைக்காலில் இருந்து செயல்படும். இதற்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் இந்திய பிரதமர், அனைத்துத் துறை அமைச்சர்கள், செயலாளர்கள், இணை துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழக முதல்வர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள், தமிழக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமுதாய இயக்கங்கள், அனைத்து தமிழ் ஆங்கில ஊடகங்கள் என இரண்டாயிரத்துக்கும் அதிகமான பிரமுகர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் கலீல் பாகவீ, இதன் தொடர்ச்சியாக குவைத் வாழ் தமிழ் மக்களிடம் அனைத்து அமைப்புகளும் இணைந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதற்காக பல்லாயிரக்கணக்கான கையெழுத்துகளும் பெறப்பட்டன. கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இத்திட்டத்தை தடை செய்யக் கோரி அனுப்பப்பட்ட மனுக்களும், அதற்கு கிடைத்த பதில்கள் அனைத்தும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுவோருக்கு மட்டும் தனியாக அனுப்பி வைக்கப்படும்.
தமிழக மக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் இவற்றையும் தேவவையான இடங்களில் பயன்படுத்தியும், பொது நல வழக்குப் போன்ற வேறு வழிகளிலும் தீவிரமாக தங்களின் எதிர்ப்பை தெரிவிக்காவிட்டால் தமிழகம் சுடுகாடாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.
இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோளாக வைத்து இச்செய்தி உருவாக்கப்பட்டது.