தலிபான் ஆயுதக்குழுவின் தலைவரான முல்லா அக்தர் மன்சூர், அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்டமையை முதன்முறையாக உறுதிப்படுத்ததும் விதமாக, தங்களது புதிய தலைவரைப் பெயரிட்டுள்ளது. பாகிஸ்தானில் வைத்துக் கடந்த வெள்ளிக்கிழமை இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக, கடந்த சனிக்கிழமை மாலை நேரத்தில் செய்தி வெளியாகியிருந்த போதிலும், தலிபான்களாலும் பாகிஸ்தானாலும், இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டங்களில் அக்குழு பங்குபற்றுவதாகச் செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையிலேயே, தலிபானின் பிரதான பேச்சாளரான ஸபியுல்லா முஜாகித்தினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், புதிய தலைவராக மௌலவி ஹய்பதுல்லா அகுன்ஸடா நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளால் கடந்தாண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தலிபானின் முன்னாள் பிரதம நீதியரசர் எனப் பெயரிடப்பட்டிருந்த அகுன்ஸடா, பாகிஸ்தானிலுள்ள மதரசாக்களில் செல்வாக்குக் கொண்டவரென அறியப்படுகிறது.
இவர், முன்னைய தலைவரான மன்சூரின் பிரதித் தலைவராகப் பணியாற்றியவராவார்.
பிரதித் தலைவர்களாக, அண்மைக்கால பாரிய தாக்குதல் பலவற்றின் சூத்திரதாரி என வர்ணிக்கப்படும் சிராஜுதின் ஹக்கானி, தலிபானின் ஸ்தாபகத் தலைவர் முல்லா ஓமரின் மகன் முல்லா மொஹமட் யாகூப் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
‘புதிய எமிர் அல்-மொஹீதினிடம் (நம்பிக்கையுள்ளவர்களின் தளபதி), அனைத்து மக்களும் அடிபணிய வேண்டும்” என, அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊடக அறிக்கையில், மன்சூர் மீதான தாக்குதல் பற்றியோ அல்லது அது தொடர்பான தங்கள் எதிர்வினை தொடர்பாகவோ, எந்தவொரு விடயத்தையும் தலிபான்கள் வெளியிட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைவரைத் தலிபான் நியமித்துள்ளமை, பாகிஸ்தானுக்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், மன்சூர் தான் உயிரிழந்தாரா என்பதை உறுதிப்படுத்த மறுத்துவந்த பாகிஸ்தானுக்கு, அடியாக விழுந்துள்ளதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட கடவுச்சீட்டில், அவர் பாகிஸ்தானின் விமான நிலையங்களைப் பயன்படுத்தி, அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணித்தார் என்பது, பாகிஸ்தானின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
– See more at: http://www.tamilmirror.lk/173106#sthash.Mi63FiyL.dpuf