தலிபான்கள் வெளியிட்டிருக்கும் கல்வி தொடர்பான நீண்ட அறிக்கையில் மாணவிகள் ஆசிரியைகளால் மட்டுமே படிப்பிக்கப்பட வேண்டும். அது சாத்தியமில்லாவிட்டால் நல்ல நடத்தையுள்ள முதியவர்களால் படிப்பிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தலிபான்களின் முதலாவது ஆட்சி 2001ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னர் வளர்ந்துள்ள தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இந்த ஆணை பொருந்துவதாகும்.
அவர்களின் காலகட்டத்தில் ஒரே பாலின வகுப்பறைகள் தொடர்பான விதிகள் மற்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் குடும்பத்தின் ஆண் உறுப்பினர் ஒருவர் உடனிருக்க வேண்டும் என்றும் மற்றும் பல விதிகள் காரணமாக பெண்கள் பெரும்பாலும் கல்வியிலிருந்து விலக்கப்பட்டனர்.
புதிய விதிமுறைகளின் கீழ் பெண்கள் உடல் முழுவதையும் உள்ளடக்கிய பர்தா அணிய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை. ஆனால் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை முழுமையாக மூடவேண்டும். கடந்த வருடங்களில் புர்கா மற்றும் நிகாப் என்பனவுடன் காபூலின் வீதிகளில் பெண்கள் காணப்படுவது பெருமளவில் குறைந்திருந்தது. சில நகரங்களிலும் பட்டணங்களலும் மட்டுமே இவற்றைக் காணக்கூடியதாக இருந்தது.
தனியார் வகுப்புக்கள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகங்கள் ஆசிரியைகளை மாணவிகளுக்காக நியமிக்க வேண்டும் என்று அந்த ஆணை குறிப்பிடுகிறது.
அத்துடன் பெண்களும் ஆண்களும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் பிரத்தியேக வாயில்களை பயன்படுத்தவேண்டும். ஆசிரியர்களை நியமிக்க வசதி இல்லாவிட்டால் கல்லூரிகள் வயது முதிர்ந்த ஆசிரியர்களை அதுவும் நல்ல நடத்தையுள்ளவர்களை நியமிக்க வேண்டும்.
தற்பொழுது பெண்கள் பிரத்தியேகமாக கல்வி கற்கின்ற நிலையில் அவர்களுடைய பாடங்கள் ஆண்களுக்கு ஐந்து நிமிடம் முன்னதாக முடிக்கப்பட வேண்டும். இருபாலாரும் ஒரே நேரத்தில் வெளியேறுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்படவேண்டும்.
ஆண் சகாக்கள் வெளியேறும்போது மாணவிகள் தங்களது ஓய்வு அறைகளில் தங்கி இருக்க வேண்டும் என்று தலிபான் உயர் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் இது சிரமமான திட்டம். எங்களிடம் போதியளவு பெண் பயிற்சியாளர்கள் இல்லை என்று தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் கூறினார்
இருப்பினும் தலிபான்கள் பெண்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப அனுமதிப்பது ஒரு எதிர்மாறான முன்னேற்றப்படி என்றும் அவர் கூறினார்.
கடந்த 20 வருட காலத்தில் தலிபான்கள் சக்தி இழந்து விட்டதன் பின்னர் பல்கலைக்கழக அனுமதி தொகைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. பிரதானமாக பெண்களுக்கான அனுமதி.
இம்முறை தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து படிப்பில் ஈடுபட்டதுடன் கலந்துரையாடல்களிலும் இருபாலாரும் பங்கு பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.