ஈராக்கில் 2 புதைகுழிகளில் 500க்கும் மேற்பட்டோரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஈராக்கில் 2014ம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் தொடங்கியது. ஈராக்கின் 2ஆவது பெரிய நகரமான மொசூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனி நாட்டை உருவாக்கினார்கள்.
தற்போது அமெரிக்க ராணுவம் உதவியுடன் ஈராக் ராணுவம் மொசூல் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளை மீட்டுள்ளது. அங்கு இராணுவம் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. மொசூல் அருகே படவுஸ் நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அங்கு 2 மிகப் பெரிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை ராணுவ வீரர்கள் தோண்டி ஆய்வு மேற்கொண்டனர்.
2 புதை குழிகளிலும் 500க்கும் மேற்பட்டோரின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன. அவை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன. ஒரு புதைகுழியில் 470 உடல்களும், மற்றொரு குழியில் 30 உடல்களும் புதைக்கப்பட்டிருந்தன.
இவர்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்டு தண்டனை நிறை வேற்றப்பட்டவர்களாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 2014ஆம் ஆண்டு ஜூன் 10ம் திகதி படவுஸ் சிறையில் 600 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.