கொழும்பு நாராஹென்பிட்டி பிரதேசத்தில் பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுடீன் 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.
தாஜூடீனின் மரணம் நடந்த அதே நாளில் முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நடந்து கொண்ட விதம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கடும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தாஜுடீன் கொலை சம்பவம் நடைபெற்ற போது ஷிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாஜூடீனின் கொலை இடம்பெற்ற போது அலரி மாளிகையிலிருந்து 41 தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் குறித்த தொலைபேசி அழைப்புகள் ஷிரந்தியின் தனிப்பட்ட இலக்கத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதிற் பெரும்பான்மையான அழைப்புகள் தற்போது விளக்க மறியலிலிருக்கும் முன்னாள் பொலிஸ் அதிபர் அனுர சேனநாயக்காவுக்கே மேற்கொள்ளப்பட்டுள்ளன எனக் குற்றப்புலனாய்ப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, கொழும்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள அலோஷியஸ் மகேந்திரனின் பத்திரிகை இது சம்பந்தமாக செய்தியைப் பிரசுரித்திருக்கும் போதிலும் செய்தியின் உண்மைத்தன்மை இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
(எஸ். ஹமீத்)