ஒருவேளை அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் தாலிபன்களின் அடாவடிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்களிடம் இருக்கும் பல்லாயிரக் கணக்கான படையினர் தாலிபன்களை எதிர்க்கத் தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும் இந்த கூற்றை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.
ஆனால் என்.ஆர்.எஃப் படையின் பலமாக உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதியை தாங்கள் சூழ்ந்து விட்டதாகவும் அந்தக் கிளர்ச்சி குழுவினரை சிறைப்பிடித்து வைத்துள்ளதாகவும் தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.
தலைநகர் காபூலில் வடக்குப் பகுதியில் இருக்கும் இந்த பிராந்தியத்தில் தாலிபன் படைகள் முன்னேறி வருவதாக தாலிபன் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தாலிபன்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அதிபர் அஷ்ரப் கனி ஆட்சியில் துணை அதிபராக இருந்த அப்துல்லா சாலே தற்போது பஞ்ஷிர் பகுதியில் உள்ளார்.
இந்தப் பள்ளத்தாக்கின் நுழைவுப் பகுதியில் தாலிபன்கள் தங்கள் படையினரைக் குவித்துள்ளதாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பஞ்ஷிர் பள்ளத்தாக்கும் படையெடுப்புகளும்
பஞ்ஷிர் பகுதி, அதிலும் குறிப்பாக பஞ்ஷிர் பள்ளத்தாக்கு படையெடுப்புகளை எதிர்த்துப் போராடுவதற்காக பெரும் பெயர் பெற்றது.
சோவியத் ஒன்றியம் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே 1979 முதல் 1989 வரை நடந்த போரிலும் தாலிபன்களுக்கு எதிராக 1990களில் நடந்த சண்டையிலும் இந்தப் பகுதி வெற்றிகரமாக படையெடுப்புகளைத் தடுத்தது.
நாட்டின் பெரும்பான்மையான இடங்களை தாலிபன்கள் கைப்பற்றியுள்ள நிலையில், பஞ்ஷிர் பகுதி தற்போது இன்னும் ஆப்கனிஸ்தான் தேசிய எதிர்ப்பு படையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
இந்த அமைப்பை நிறுவியவர் ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி நாயகரான அகமது ஷா மசூதின் மகன் அகமது மசூத்.
அகமது ஷா மசூத் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான கிளர்ச்சியை முன்னின்று நடத்திய கொரில்லா தாக்குதல் பிரிவு தளபதியாக பணியாற்றினார்.
அதன்பின்பு 1990களில் ஆயுதக் குழுக்களுக்கு எதிரான ஆஃப்கன் அரசின் படைப் பிரிவுக்கு தலைமை வகித்தார் அகமது ஷா மசூத்.
2001ஆம் ஆண்டு அவர் கொலை செய்யப்படும் வரை தாலிபன் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களின் முக்கிய தளபதியாக அவர் விளங்கினார்.
நாடு முழுவதும் உள்ளூரிலேயே பயிற்சி அளிக்கப்பட்ட போராளிகள் தற்போது பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதிக்கு சமீப காலமாக வருவதாக பிபிசி ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியில் அலி நசாரி தெரிவித்துள்ளார்.
என்.ஆர்.எஃப் படையின் கொள்கை என்ன?
மையப்படுத்தப்படாத அரசு முறையே என்.ஆர்.எஃப் அமைப்பின் இறுதி இலக்காக உள்ளது.
“ஆப்கானிஸ்தானின் சிறுபான்மையினரால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு இங்கு யாரும் பெரும்பான்மையினர் கிடையாது; இது பல பண்பாடுகளைக் கொண்ட கொண்ட நாடு; எனவே அதிகாரம் இங்கு பகிரப்பட வேண்டும்.”
“அனைத்து இனக் குழுக்களையும் சேர்ந்தவர்கள் தாங்கள் அதிகாரத்தில் இருப்பதாக உணர வைக்கும் வகையில் அதிகார பகிர்வு ஒப்பந்தம் உருவாக்கப்படவேண்டும்,” என்று அலி நசாரி தெரிவிக்கிறார்.
ஒரு குழு மட்டுமே அரசியல் அதிகாரத்தை ஆதிக்கம் செலுத்துவது உள்நாட்டுச் சண்டைக்கு வழிவகுப்பதுடன் தற்போதைய நெருக்கடியான நிலை தொடரவும் வைக்கும் என்று அவர் கூறுகிறார்.
“சோவியத்தின் செம்படையே அதன் அத்தனை வலிமையையும் கொண்டு எங்களை வீழ்த்த முடியவில்லை. செம்படையின் வலிமை கொண்ட அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இப்போது வேறு எந்தப் படையும் கிடையாது. 25 ஆண்டுகளுக்கு முன்பும் தாலிபன்கள் எங்கள் பள்ளத்தாக்கை கைப்பற்ற முயற்சி செய்து தோல்வி அடைந்தனர். அது அவர்களுக்கு மோசமான வீழ்ச்சியாக இருந்தது,” என்று அலி நசாரி கூறுகிறார்.