சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத், உலகின் கூரை என, வர்ணிக்கப்படுகிறது. இமய மலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில், யார்லங் ஸாங்போ என்ற நதி உள்ளது. மிக ஆழமான மலைப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த நதியின் குறுக்கே, பிரமாண்ட அணை கட்ட, சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த அணையின் வாயிலாக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க, சீனா திட்டமிட்டுள்ளது .’இந்த அணை, அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான திபெத் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன், அவர்கள் ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த இடங்களை விட்டு குடிபெயர வேண்டிய நிலையை ஏற்படுத்தும்’ என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆற்றுமீன்கள் மற்றும் விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் இந்த திட்டம் கடுமையாக பாதிக்குமென கூறப்படுகிறது.’திபெத் ஆற்றில் இருந்து பாயும் நீர், இமயமலையை கடந்து இந்திய பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா நதியில் வந்து சேரும் நீர்வழித்தடத்தில் தடையை ஏற்படுத்தும்’ என, இந்திய வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.