சிங்கப்பூரின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பெருநகரத்திட்டம் (மெகாசிட்டி) திருகோணமலை நகரில், தமிழ் மக்கள் குடி அடர்த்தியை இல்லாதொழிக்கும் சதித் திட்டம் எனத்தெரிவித்துள்ள திருகோணமலை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சி. நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்), பெருநகரத்திட்டத்தை தடுப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இணைந்து குரலெழுப்ப வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ் மக்கள் செறிந்து வாழ்தல் மற்றும் இலங்கையில் இயற்கை வனப்பும், அழகும் கொண்ட நகரமாக, திருகோணமலை நகரம் இரண்டு வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றதென, இன்று (07) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ள அவர், மெகாசிட்டி திட்டத்தால், புறநகர் கிராமங்களுக்கு இடம்பெயர வேண்டிய இக்கட்டான நிலைமை, தமிழர்களுக்கு ஏற்படுமென அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு பாரம்பரியமாக வாழும் தமிழ் மக்கள், தமது பாரம்பரியங்களை, நிலங்களை இழந்து வேறு இடங்களுக்குச் செல்லவேண்டுமென அந்த அறிக்கையின் ஊடாக எச்சரித்துள்ள அவர், இத்திட்டத்தை விரைவுபடுத்தி நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தை அமுல்படுத்துவதால் பல்வேறான நன்மைகள் கிடைக்கவுள்ளனவென பலரும் தெரிவிக்கின்றனர். அப்படியாயின், அந்த நன்மைகளை வகைப்படுத்திக்கொண்டு, பகிரங்க விவாதத்துக்கு வருமாறும், அதனூடாக, தமிழ்மக்கள் தெளிவொன்றை பெற்றுக்கொள்வர் என்றும் அவர், தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.