தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டம் உருவெடுக்கலாம் என ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவினாலோ ஜ.நாவினாலோ தீர்வு கிடைக்காது என்று குறிப்பிட்ட அவர் சகலரதும் ஒத்துழைப்புடன் விசேட நீதிமன்றம் அமைத்து யுத்ததின் போது இடம் பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜெனீவா பிரேரணை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இங்கு பல் இன, பல் சமூக, பல் கலாசார, பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இது பல் இன நாடாகும்.இங்குள்ள பல் இனத்தன்மையை பல் சம்பிரதாயத்தை ஏற்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது.
இன நல்லுறவை ஏற்படுத்துவன் மூலமே எம்மால் முன்னேற முடியும். இதற்காக சகல இன மத மக்களினதும் சம உரிமைகள் ஏற்கப்பட வேண்டும். ஒரு மதத்தை விட இன்னொரு மதம் உயர்வானதல்ல. மொழி கலாசார சம உரிமையை ஏற்காது இன ஒருமைப்பாட்டை ஏற்கமுடியாது.
இன ஒருமைப்பாட்டை குழப்ப கடந்த காலத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிகாரத்தை பெறும் அவாவிலே இனவாதம் பரப்பட்டது. இந்த இனவாதம் எவராலும் கட்டுப்படுத்த முடியாத யுத்தமாக மாறியது.
வடக்கிலும் தெற்கிலும் பரப்பப்பட்ட இனவாதமே யுத்தத்தைத் துண்டியது. யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு சொத்து சேதம் எமக்கு இன்னமும் தெரியாது. மீண்டும் இனவாத யுத்தம் தலைதூக்க இடமளிக்க முடியாது.
வடக்கில் உள்ள தாய், தந்தை போன்றே தெற்கில் உள்ள தாய் தந்தையரும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த பூமி இனியும் இரத்தத்தினாலோ கண்ணீரினாலோ ஈரமாக கூடாது.
இதற்காக ஜெனீவா பிரேரணையை ஆழமாக ஆராய கூறுகிறது. இந்த பிரேரணை கட்டியெழுப்பப்பட்டுள்ள நல்லிணக்க நிலையை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம் எமது நாட்டு பிரச்சினைக்கு ஐ.நா அமைப்பு மத்தியஸ்தமாக செயற்பட வேண்டும். சகல நாடுகளும் சகல இனங்கள் தொடர்பில் ஐ.நா நடுநிலையாக செயற்பட்டதாக தெரியவில்லை.
அமெரிக்கா மற்றும் மேலைத்தேய நாடுகளுக்கு சார்பாகவே அது செயற்பட்டு வருகிறது. இந்த நாடுகள் தமது அரசியல், பொருளாதார யுத்த நிகழ்ச்சி நிரலுக்கமைய உலகம் முழுவதும் செயற்பட்டு வருகின்றன.
ஒரு காலகட்டத்தில் இந்தியா பிரச்சினைக்கு தீர்வு தரும் என தமிழ்க் கட்சிகள் நம்பின. இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பகுதியில் மீன்பிடித்து சென்றபோது இந்தியா மெளனம் காத்தது.
இந்தியா தமிழ் மக்களின் பாதுகாவலர் அல்ல. சம்பூரில் தமிழ் மக்களின் காணிகள் இந்தியாவுக்கே வழங்கப்பட்டன. பேசாலை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்தியா ஒரு போதும் தீர்வு காணாது தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருக்கும்வரை தான் இந்தியாவுக்கு இலங்கையுடன் அரசியல் செய்ய முடியும். வடக்கில் ரோ உளவு சேவை பரந்தளவு செயற்படுகிறது.
ஐ.நா தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தராது. ஈரானில், லிபியாவில், ஆப்கானிஸ்தானில், சூடான், யுகோஸ்லாவியாவில் இருந்த மக்களின் பிரச்சினைகளை ஐ.நா தீர்க்கவில்லை.
யாப்பிற்கு உட்பட்டே நாட்டு பிரச்சினையை தீர்ப்பதாக அரசாங்கம் கூறுகிறது. நாம் தாயாரித்து நிறைவேற்றிய எமது யாப்பு மேலானதாக காணப்படுகிறது. ஆனால் மக்கள் பிரதிநிதிகளின் கருத்து பெறாமலே இந்த யாப்பு தயாரிக்கப்பட்டது.
தண்டிக்கவோ குரோதம் ஏற்படுத்தவோ அன்றி மீண்டும் அவ்வாறான யுத்தம் ஏற்படாதிருக்க கடந்த கால யுத்தம் குறித்து முழு நாடும் அறிய வேண்டும்.
பூமியாக நாம் இணைவதைவிட மக்கள் என்ற வகையில் இணைய வேண்டும். மக்கள் என்ற வகையில் ஏற்படாத இணைவு மீண்டும் பிளவிலேயே முடிவடையும். வடக்கில் எமக்காக அரசியல் செய்த லலித் குகனுக்கு என்ன நடந்தது என்பதை நாம் அறிய வேண்டும்.
அதேபோன்று தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ் மக்களுக்கு அறிய உரிமை உள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என சிலர் கோருகின்றனர். 1978ல் இடதுசாரி கட்சிகள் ஒன்றாக இந்த சட்டத்தை நிராகரித்தன.
2009 மே மாதத்திக்கு முன் கைதான பல கைதிகள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 5 வருடத்துக்கு மேலாக வழக்கு விசாரணையின்றி சிறையில் உள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும். எல்.ரி.ரி.ஈ அடையாள அட்டை வைத்திருந்த இளைஞர் சிறையில் இருக்கிறார்.
அதில் கையொப்பமிட்டுள்ள தயா மாஸ்டர் வெளியில் இருக்கிறார். கே.பி வெளியில் இருக்கிறார். பணம் உள்ளவர்களுக்கு விடுதலை கிடைக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இனியும் பேணத் தேவையில்லை. மக்கள் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
நாட்டிலுள்ள சட்டங்கள் போதுமானவை. அவசரகால சட்டம் ஒவ்வொரு தடவையும் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்காகவே நீடிக்கப்பட்டது. தமிழ் மக்கள் தண்டிக்கப்படுவதையன்றி நடந்த தவறை அறியவே விரும்புகின்றனர்.
உள்ளகப் பொறிமுறையை தண்டிக்கும் பொறிமுறையாக இன்றி தவறைத் திருத்திக்கொள்ளும் நடைமுறையாக இருக்க வேண்டும்.
நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து த.தே.கூ போன்றே எமக்கு சந்தேகம் இருக்கிறது. நீதி சரியாக நிலைநாட்டப் பட்டால் பாராளுமன்றத்திலுள்ள பலர் வெலிக்கடை சிறையில் இருக்க வேண்டும்.
விசேடமான நீதிமன்ற முறையொன்றை சகலரதும் ஒத்துழைப்புடன் ஸ்தாபித்து யுத்த காலத்தில் நடந்தது குறித்து ஆராய வேண்டும். பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றினூடாக இதனை விசாரிக்க வேண்டும். வெளியில் ஆணைக்குழுக்கள் உருவாக்கி விசாரணை செய்வது பொருத்தமானதல்ல.
பாராளுமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும். கே.பி போன்றவர்களும் இங்கும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். மீண்டும் இவ்வாறான தவறுகள் நடைபெறாதிருப் பதற்காக நடந்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.
ஜனவரி 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் முதற்தடவையாக வாக்களித்தார்கள். ஆனால் புலி வாக்குகளினால் தோற்றதாக மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார். காணி என்பது தமிழ் மக்களின் வாழ்க்கையுடன் பிணைந்தது.
புலிகளிடம் இருந்த கனரக பீரங்கிகள் காரணமாக பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று பாரிய ஆயுதங்கள் படையினரைத் தவிர வேறு எவரிடமும் இல்லை.
எனவே தமிழ் மக்களின் காணிகள் மீள வழங்கப்பட வேண்டும். டயஸ்போராவுக்கு இங்கு எதுவும் செய்ய முடியாது.
பிரச்சினைகள் தீர்க்காவிடின் மீண்டும் ஆயுத போராட்டம் வெடிக்கலாம். ஆனால் புலிகள் அழிக்கப்பட்ட விதத்தின் படி மீண்டும் ஆயுத போராட்டம் ஏற்படாது. நாம் பிரச்சினை ஏற்படுத்தாவிடின் மீண்டும் அத்தகைய நிலை உருவாகாது என்றார்.