தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீதான தாக்குதல் வழக்கு எதிர்வரும் 2 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக விசாரிக்கப்ப டவுள்ளதுடன் இத் தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களுக்கு சர்வதேச பிடியாணையையும் பிறப்பித்தார் யாழ் மேல் நீதி மன்ற நீதிபதி இளஞ்செழியன். கடந்த 28-11-2001 அன்று யாழ். தீவகப்பகுதிக்கு தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு சென்றவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் (21/11/2016) யாழ் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இக் குறித்த வழக்குடன் தொடர்ப்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நெப்போலியன், மதனராசா, அன்ரனி ஜீவன், கருணா கரமூர்த்தி போன்றோர் குற்றம் சாட்டப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்றைய தினம் மன்றில் 3ஆம் 4 ஆம் சந்தேக நபர்களான அன்ரனி ஜீவன் மற்றும் கருணாகரமூர்த்தி ஆகியோரே வருகை தந்திருந்தனர். அத்துடன் 1 ஆம் 2 ஆம் சந்தேக நபர்களான நெப்போலியன் மற்றும் மதனராசா ஆகியோர் பல வருடங்களாக தலைமறைவாகி உள்ளனர். இவ் நான்கு சந்தேக நபர்கள் சார்பாகவும் சிரேஸ்ட சட்டத்தரணி றெமீடியஸ் ஆஜராகி இருந்தார்.
மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி தலைமறைவாகி உள்ள சந்தேக நபர்களான நெப்போலியன், மதனராசா இருவருக்கும் சர்வதேச பிடியாணை பிறப்பித்தார். அத்துடன் அவர்கள் ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்டபோது மேல் நீதி மன்றத்தால் பிணையில் விடுதலையாகியிருந்த சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் அவர்கள் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினார் என்ற விபரக் குறிப்புக்களை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நீதிமன்றிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அத்தோடு அவர்களுக்கான சர்வதேச பிடிவிறாந்து தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.
அத்துடன் இரண்டாம் சந்தேக நபரான மதனராசா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தனால் அவருக்கு ஓய்வூதியம் உட்பட அரச சலுகைகள் எவையேனும் கொடுக்கப்படும் பட்சத்தில் அதனை உடனடியாக இரத்து செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்புத்தார்.
மேலும் இவ் வழக்கானது எதிர்வரும் 2 ஆம் திகதிவரை தொடர்ந்து விசாரிக்கப்படவுள்ளது. நாளைய தினம் 1:45 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதில் நாளைய தினம் சிவாஜிலிங்கம் சாட்சியமளிக்க உள்ளதுடன் அடுத்த நீதிமன்ற அமர்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் இவ் வழக்குடன் தொடர்புபட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் சாட்சியமளிக்க உள்ளனர்.