தேசிய கொடியை தூக்க மறுத்த வடமாகாணசபை அமைச்சரை கண்டிப்போம். ஆனால், இன்று இந்த அமைச்சர் தேசிய கொடியை தூக்கவில்லை என்பதில் குறை காணும் தென்னிலங்கை தீவிரவாதிகள், அன்று தேசியக்கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு காட்டிய நல்லெண்ணம் என்ன என்று” ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வினவியுள்ளார்.
“தமிழ் அரசியலில் இருக்கின்ற முற்போக்காளர்களை பலமடைய வைக்க சிங்கள அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் தவறிவிட்டன. இப்போதும்கூட சம்பந்தனை வெறுங்கையுடன் ஒன்றும் தராமல் ஓட்டிவிடத்தானே நீங்கள் முயல்கிறீர்கள்? ஒரே நாடு என்ற அடையாளத்துக்குள் வந்துவிட்ட சம்பந்தனை பலவீனப்படுத்தினால், வடக்கில் தீவிரவாதம் பலமடைவதை எவராலும் தடுக்க முடியாது. ஆகவே, இன்று வடக்கில் தமிழ் கல்வி அமைச்சர் தேசிய கொடியை தூக்க மறுத்ததற்கு தென்னிலங்கை தீவிரவாதிகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கொழும்பு இந்து வித்தியாலயத்தில் நேற்று (19) நடைபெற்ற நடமாடும் சேவையின் போது கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்த தேசியகொடி உட்பட்ட அரசமைப்புக்கு விசுவாசமாக நடப்பேன் என்று உறுதிமொழி அளித்து விட்டுத்தான், அனைத்து நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதுதான் சட்டம். இப்படி தேர்தலில் வெற்றி பெற்று வந்துவிட்டு, அமைச்சர் பதவியையும் பெற்றுவிட்டு இப்போது கொடியை தூக்க மாட்டேன் என்பது முரண்பாடானதாகும்” என்றார்.
“எனினும், இத்தகைய முரண்பாடான ஒரு நிலைமை வடக்கில் இன்று உருவானதற்கு தெற்கின் சிங்கள தீவிரவாத அரசியல்வாதிகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். எல்லாவற்றையும்ம் வடக்கின் மீது, தமிழர் மீது சாட்டிவிட்டு தப்பிக்கொள்ள முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.