இலங்கையிட தேசிய கொடிய பாத்தியா மச்சான்.ஒரு நாடு எண்டா சமத்துவம் இருக்கனும்டா. சிங்களவனுவல் அவனுவள்ற புத்திய காட்டிவிடுடானுவள். இஸ்லாமியர்களுக்கும் நமக்கும் உரிய இடத்தை தேசிய கொடியில தாரலஜெ மச்சான்.இதெல்லாம் காலம் கடந்து போச்சுடா மச்சான். நம்ம செத்தா தாண்டா இதை வெளியிலேயே கொண்டு வரலாம். சரி இதெல்லாம் நமக்கு எதுக்கு?நண்பனது வார்த்தைகள் மனப்படமானது நடராஜனுக்கு.
1957 ஆம் ஆண்டு பெப்ரவரி 04ஆம் நாள்.காலை தேநீருடன் சிரித்த முகத்துடன் போறன் என்று சொல்லி சென்றான். திரும்பி வரமாட்டான் என்பதை அவனது உள்ளுணர்வு அவனுக்கு சொல்லியிருக்க வேண்டும்.சிறிலங்காவின் தேசிய கொடி சுதந்திர நாளுக்காக ஏற்றப்பட்டிருப்பதை பொறுக்க முடியாத நடராஜன் கொடிக்கம்பத்தில் ஏறி பறந்து கொண்டிருந்த கொடியை கிழித்து எடுத்து கீழ் கொடியை எறியவில்லை.
வீட்டில் இருந்து கொண்டு வந்த யானை தீப்பெட்டியில் இருந்த குச்சிகளை எடுத்து பற்றவைக்க முயலுகிறான். முன்னால் நின்ற காவல்துறை அதிகாரி அப்போதுதான் அவனது கையில் தேசிய கொடி இருப்பதை காண்கிறார். எரிக்க வேண்டாம் என உரத்த சத்தத்தில் சிங்கள மொழியில் கத்துகிறார். நடராஜனுக்கு எதுவுமே கேட்கவில்லை.
தீக்குச்சி பற்றிக்கொள்ள சிறிலங்காவின் சிங்கக்கொடி முதல் முறையாக திருக்கோணமலையில் எரிக்கப்படுகிறது.காவத்துறை அதிகாரியின் கட்டளை நடராஜனை குண்டுகளால் தாக்கியது. மூன்று குண்டுகளை தாங்கிய நடராஜனது வித்துடல் நிலத்தில் கிடக்கிறது. சிறிலங்கா அரசை எண்ணிக்கையில் குறைந்த மக்களின் உரிமைக்காக முதன் முதலாக திருக்கோணமலையில் ஒர் உயிர் காவு கொள்ளப்படுகிறது 04.02.1957 ஆம் நாளன்று.
64 ஆண்டுகள் பறந்தோடி விட்டன.நடராஜன் என்றொருவர் நமது உரிமைக்காக தன் உயிரை ஈர்ந்தது கூட தெரியாத மக்களாக நாம் வாழ்கிறோம்.தனது இன்னுயிரை ஈர்ந்த நடராஜனுக்காக துயர் பகிர்கின்றேன்.கதிர்.திருச்செல்வம்