இப்படியிருக்கையில் நாட்டின் அரசியல், பொருளாதார நிலைமை காரணமாக ஒரு சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைத்து அதனை ஸ்திரப்படுத்திவிடவேண்டும் என்றே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார். ஆனால் அது இதுவரை கைகூடவில்லை. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் அம் முயற்சியைக் கைவிட்டு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பான முயற்சிகள் ஆரம்பமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையுடன் இருக்கின்ற தற்போதைய பாராளுமன்றத்தில் சர்வ கட்சிக்கோ, தேசிய அரசாங்கத்திற்கோ தமது பெரும்பான்மை ஆதிக்கத்தை அக் கட்சி விட்டுக்கொடுக்காது. இவ்வாறான நிலைமையின் காரணமாகத்தான் சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதிலும் இழுபறி இதுவரையில் இருந்து கொண்டிருக்கிறது என்றுகூடச் சொல்லலாம். இந்த நிலையில் தேசிய அரசாங்கம் என்பது எவ்வாறு சாத்தியப்படும். கைகூடும் என்பதுதான் இந்த இடத்தில் விவாதத்துக்குரியது.
இலங்கை பாராளுமன்றத்தில் சிறுபான்மைக்கட்சிகள், பெரும்பான்மைக் கட்சிகள் என அரசியல் கட்சிகள் பலவற்றின் அங்கத்தவர்கள் இணைந்திருக்கிறார்கள். ஆனால், யாரும் நாட்டு மக்களின் நலன் குறித்தோ நாட்டின் எதிர்காலம் பற்றியோ மனச்சாட்சியுடன் சிந்திப்பதாக இல்லை என்ற குற்றச்சாட்டு காணப்பட்டாலும், அரசியல் என்று வந்துவிட்டால் அதனைப்பற்றி ஏன் யோசிக்க வேண்டும் என்பதே நிலைப்பாடாக இருக்கிறது. யாரை யார் வீழ்த்தலாம் என்று சிந்திக்கின்ற அரசியலே நடைபெறுகிறது. இதில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு யார் பிள்ளையார் சுழி போடுவது என்பதும் ஒரு வகையான கேள்வியே.
அது ஒருபக்கமிருக்க, நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் இருந்து வருகின்ற சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் இதுவரையில் தீர்வுக்குட்படுத்தப்படவில்லை. அதற்காக நடைபெற்ற அகிம்சை முதல் ஆயுதம் வரையான போராட்டங்கள் பெற்றுக் கொடுத்தவைகள் யாவும் பெரும் இழப்புக்களும், துன்பங்களும், துயரங்களுமே.
ஆனால் அதனை பெரும்பான்மைத் தரப்பு இன்னமும் புரிந்து கொள்ளாமலிருப்பதற்கான காரணத்தினை இதுவரை யாரும் சரியாக வெளிப்படுத்தி வரையறுக்கவில்லை. அது தொடர்பில் தமிழர் அரசியல் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எல்லோரும் ஓடிச் சென்று வலிந்து முட்டுக் கொடுத்து கண் திறந்தே பள்ளத்தில் விழுந்ததாகவே சொல்லிக் கொள்ளலாம்.
இனப்பிரச்சினையானது வடக்கு – கிழக்கு மக்களுக்கு மாத்திரமல்ல முழுநாட்டுக்குமே இன்னல்களைக் கொடுத்தது. இருந்தாலும் தமிழர்களின் வலியை பெரும்பான்மையினர் உணர மறுப்பதே கவலைக்குரியது. வடக்கு கிழக்கு துண்டாடப்படுவதும், காணிகள் கபளீகரம் செய்யப்படுவதும் காலங்காலமாக நடைபெற்று வருகின்ற ஒன்று.
கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்களும், அரச தலைவர்களும் சிங்களக் குடியேற்றங்கள் மூலமாக தங்களுக்கு வேண்டிய தமிழ் இனப்பரம்பலைக் குறைக்கின்ற செயற்பாட்டையே முன்னெடுத்திருந்தனர். அத்தோடு இன அழிப்பினையும் தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் தாங்கள் கொடுக்க நினைப்பது எதுவென்றாலும் அதனை தமிழர்கள் ஏற்கவேண்டும் என்ற மனோநிலையையே கொண்டுமிருக்கின்றனர்.
1948இல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த பொழுது அந்தச் சுதந்திரம் எண்ணிக்கையில் பெரும்பான்மைத்துவ சிங்களவர்களுக்கே உரித்தாகிவிட்டது என்பதுதான் உண்மை. அதனால்தான் தமிழர்களின் போராட்டம் ஆரம்பமானது. அதனை சிங்களவர்கள் கணக்கிலும் எடுக்காமைபோன்று இத்தனை காலத்திலும் அதற்கான தீர்வை வழங்காமலிருப்பதற்கும் காரணமாகும்.
இவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், ஒற்றையாட்சிச் சட்டத்துக்குள் இருக்கின்ற இலங்கை அதற்குள் இருந்து முதலில் வெளியே வருவது சிறப்பானதாக அமையும். அதன் மூலமே இனமுரண்பாட்டுச் சிக்கலுக்கான தீர்வைச் சாத்தியப்படுத்தும் முதல் அடியை எடுத்து வைக்க முடியும்.
தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக புதியதாக வருகின்ற ஜனாதிபதியோ, பிரதமரோ ஒற்றை வார்த்தையில் கவலையடைகிறோம் என்று தெரிவிப்பதும், அரசியல் தீர்வு கொடுக்கிறோம் என்பதும், பயங்கரவாதச் சட்டத்தினை திருத்துகிறோம், நீக்குகிறோம் என்று சொல்வதும் தமிழர்களை அமைதிப்படுத்துவதற்கானதல்ல என்பது தமிழர்களுக்கும் தெரிந்ததே.
இருந்தாலும், வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையுடன் இருக்கின்ற தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கு முன்வருகைகள் போதாமலிருப்பது கவலைக்குரியது.
நடந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் உரிமைக்கான பிரச்சினையில் பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், சந்திரிகா கொண்டுவந்த தீர்வுப் பொதி, இடைக்கால நிருவாக சபை எனப் பல முயற்சிகள் பயனற்றே போயின. ஒப்பந்தங்கள் கிழிக்கப்பட்டதும் தீர்வுப் பொதிகள் எரிக்கப்படுவதும் நடைபெற்றன. அதனை தேசியக் கட்சிகளே செய்திருக்கின்றன.
இலங்கையின் பெரும்பான்மைக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரிக் கொள்கையுடையவர்களாகக் காட்டிக் கொண்டிருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி என்கிற ஜே.வி.பி கூட தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வைக் கொடுப்பதில் பூரண அக்கறையைக் காட்டியிருக்கவில்லை.
அத்தோடு, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்ட வட கிழக்கை பிரித்து அதனைத் தனித்தனியாக்கியது மாத்திரமல்லாது, தொடர்ச்சியாகவும் தமிழர்களுக்கெதிரான வேலைத்திட்டங்களே மேற்கொள்ளப்பட்ட வண்ணமிருக்கின்றன.
வடக்கு – கிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச 13 பிளஸ், பிளஸ் தருவேன் என்று கூறிவிட்டு கை உதறிவிட்டார். அதற்குப் பின்னர் ஜனாதிபதியாக வந்த மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அரசாங்கத்துடன் முரண்பட்டு புதிதாக அமைக்கப்படவிருந்த அரசியலமைப்பு முயற்சியை இடைநடுவில் செல்லாக் காசாக்கினார். அதற்கான காரணங்களை யாரும் இன்னமும் விளக்கவில்லை.
இலங்கைக்கே உரித்தான விடயமாக இருக்கின்ற அரசியலமைப்புத் திருத்தம் என்பது முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. இப்போது 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படவிருக்கிறது. இந்தத்திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக 9 மனுக்கள் நேற்றுவரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிக்கின்றன. 22ஆவது திருத்தம் வரையில் இவற்றுக்கான விடைகள் கிடைக்கப் போவதில்லை.
இது ஒரு புறமிருக்க, புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கென குழுக்கள் ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைக்கப்பட்டு இறுதியில் காணாமல் போய்விடுகிறது. இவ்வாறான நிலைமை தொடர்வதானது இலங்கையின் அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் சிறப்பானதல்ல. அப்படியானால் உடனடியாகச் செய்து முடிக்கவேண்டிய வேலைகளில் ஒன்று புதிய அரசியலமைப்பு உருவாக்கமே.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரசயிலமைப்பு முயற்சி முயற்சி பயனற்றுப் போனது. புதிய அரசியலமைப்பு மாற்றம், தமிழர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதனைக் குறியாகக் கொண்டிருக்கவேண்டும் என்பது இதில் முக்கியப்படுத்தப்படவும் வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு முயலாமல் இடைநடுவில் அல்லது சிறிது காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையை சமாளிக்க முயலும் முயற்சிகளால் பயனேதுமில்லை. அவ்வாறானதில் ஒன்றே புலம்பெயர் தமிழர் அமைப்புகள், புலம் பெயர்ந்தவர்களின் தடைகள் நீக்கமாகும்.
கடந்த கால யுத்தத்தின் போதும், அதற்குப் பின்னரும் யாருக்கும் தெரியாமல் கைது செய்யப்பட்டவர்கள், கண் கண்ட சாட்சிகளுடன் கைதானவர்கள், கையளிக்கப்பட்டவர்கள் என்கின்ற தொகை இதுவரையில் காணாமல் போனோர் என்ற வரையறைக்குள்ளேயே இருக்கின்றனர். ஆனால், உண்மையில் காணாமல் போனோர் என்பதே தவறான பதப் பிரயோகம். ஒருவர் எப்படி காணாமல் போக முடியும்.
காணாமல் போனதாகக் கருதப்படும் அனைவரும் தமது உறவு, சொந்தங்கள் மூலம் அல்லது அவர்களது கண் முன்னால் யாராலோ அழைத்து கொண்டு செல்லப்பட்டவர்களே. யாராலோ காணாமல் ஆக்கப்பட்டவர்களே. என்கின்ற விடயம் மிக முக்கியமானது. பொருளாதாரப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிக்காகவே தேசிய அரசாங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இருந்தாலும் அந்த அரசாங்கத்தின் முதல் வேலைகளில் ஒன்றாக இதுவும் இருக்கத்தான் வேண்டும்.
எது எவ்வாறானாலும், பெரும்பான்மை சமூகத்தையும், பௌத்த தேசியவாதத்தையும், அதன் மேலாண்மையையும் இலக்காகக் கொண்டதாக இருக்கின்ற இலங்கையின் ஆட்சிமுறையில் மாற்றம் ஏற்படுகின்ற தேசிய இணக்கப்பாடு சாத்தியமெனில் அதுவே தேசிய அரசாங்கத்திற்குப் பயனைப் பெற்றுத் தருவதாக இருக்க முடியும்.
தமிழர்கள் நலன் சார்ந்து நோக்குகையில், தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் இந்த மனோநிலையில் மாற்றமில்லையெனில் பயனேதுமில்லை. அந்தவகையில் வலிமையான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கி இன ஐக்கியத்தை ஏற்படுத்த உளப்பூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயலாற்ற வேண்டும். அது தேசிய அரசாங்க முயற்சி மூலம் நடைபெறும் என்று நம்புவோம்.
ஆனாலும், பௌத்த தேசியவாதமும், யுத்த வெற்றிவாதமும், இராணுவ மேட்டிமைத்தனமும் கோலோச்சியிருக்கின்ற நிலைமையில் இது சாத்தியமா என்று சீர்தூக்கிப் பார்க்கலாமே தவிர வேறு எதனையும் செய்துவிட முடியாது.