“தேயிலையை அழிக்காதே; கோப்பியை பயிரிடாதே”

உடரதல்ல தோட்ட இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த 150 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நானு ஓயா நகரில் வியாழக்கிழமை (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

உடரதல்ல தோட்டத்தில் நல்ல தேயிலை விளைச்சளை தரக்கூடிய இலக்கம் (05) தேயிலை மலையில் அத்தோட்ட நிர்வாகம் தேயிலைச் செடிகளை அகற்றிவிட்டு கோப்பி பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

அதேநேரத்தில் இந்த விடயம் தொடர்பாக தோட்ட நிர்வாகம் உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள்,தோட்ட தொழிற்சங்க தலைவர்களின் ஆலோசனைகளை பெறாது தான்தோன்றி தனமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தோட்ட நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டினால் அந்த தோட்டத்தில் தேயிலை தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் நாளாந்த தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, எதிர்காலமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில் இந்த விடயம் குறித்து தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் பலமுறை தோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து, பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த போதிலும் தோட்ட நிர்வாகம் கோப்பி பயிரிடுவதை மாத்திரம் நோக்காக கொண்டுள்ளது.

எனவே, தேயிலையை அழித்துவிட இடமளிக்கப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தோட்ட நிர்வாகம் குறித்த தோட்டத்தின் (05) ஆம் இலக்க தேயிலை மலையில் கோப்பியை பயிரிட தேயிலையை அழிக்க இயந்திரங்களை பாவிப்பதை தடுக்க முயன்ற தோட்ட தலைவர்கள் உள்ளிட்ட சிலரை பணிநீக்கம் செய்துள்ளதையும் தொழிலாளர்கள் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், உடரதல்ல தோட்டத்தில் தலைத்தூக்கியுள்ள இந்த பிரச்சினை தொடர்பில் நுவரெலியா உதவி தொழில் ஆணையாளர் திணைக்களத்தில் புதன்கிழமை (15) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில், தொழிற்சங்கங்கள்,தோட்ட நிர்வாகம்,தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர் எனினும், அந்தப் பேச்சுவார்த்ததை தோல்வியில் முடிந்துள்ளது.

இதனையடுத்தே, உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் நானு ஓயா நகரில் ஒன்று கூடி தமது கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே, உடரதல்ல தோட்டத்தில் தேயிலையை ஒழிக்க இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்த தொழிலாளர்கள் உரிய தீர்வு கிட்டும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் மேலும் தெரிவித்தனர்.

ஆ.ரமேஸ்