மக்களின் பங்கேற்புடன் தேர்தல் வாக்குறுதிகளை இடது ஜனநாயக முன்னணி(எல்டிஎப்) அமல்படுத்தும் என்றும் முற்றிலும் ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சியை எல்டிஎப்பிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.மலம்புழா தொகுதியில் 23,142 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரைத் தோற் கடித்த அச்சுதானந்தன், கேரள சட்டமன்றத் தேர்த லில் இடதுஜனநாயக முன் னணிக்கு மகத்தான வெற்றி தேடித் தந்த வாக்காளர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்ப தாவது:மக்கள் ஒப்படைத்துள்ள பெரும் பொறுப்பை பெரு மையுடன் ஏற்றுக் கொள்கிறோம். கேரளத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும், வளங் களையும் போற்றிப் பாது காக்கவும் வளர்க்கவும் செய்வோம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.கடந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக் காலத்தில் நடமாடிய மக்கள் விரோத அணுகுமுறைகளை முற்றிலும் மாற்றி அமைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கிராமசபை முதல் மக்களின் உணர்வு களை அறிந்து கொள்வதற்கான எல்லா அமைப்புகளையும் பயன்படுத்திக் கொள்வோம். இது எங்கள் கடமையாகும்.கேரளம் மட்டுமே உரிமை பாராட்டும் பல்வேறு சாதனை கள் உண்டு. அவற்றைக் காப் போம்.
அத்துடன் பல்வேறு பிரச்சனைகளையும் சவால்களை யும் கேரளா எதிர்கொள்கிறது. அவற்றில் மிகவும் முக்கியமானது கேரளம் முழுவதற்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் ஒரு வளமான எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ப தாகும். அதுபற்றி எல்டிஎப்பின் தேர்தல் அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசும் மற்ற பிற்போக்கு அரசியல் சக்திகளும் பல்வேறு பிரச்சனைகளை எங்களுக்கு எதிராக உருவாக்குவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அவற்றையும் மக்கள் பங்கேற்புடன் வலுவாக நாங்கள் எதிர்கொள்வோம் என்றும் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.