தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 35 பேர் பல வருடங்களாக தொண்டர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவை ஊதியமாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று கடந்த 2 வருடங்களாக வழங்கி வந்தது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்னர் இவர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. அப்போது இவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத் தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அது தேர்தல் காலம் என்பதால் வேட்பாளர்களான ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், இ.அங்கஜன், ம.விஜயகலா ஆகியோர் அவர்களின் போராட்டத்தில் தலையிட்டு தீர்வு பெற்றுத் தருகிறோம் என வாக்குறுதி அளித்தனர். அத்துடன் அவர்கள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி தொண்டர்களுக்கு 3 மாதங்கள் தற்காலிக பணி நீடிப்பும் பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் அந்த பணி நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் தமக்கு நிலையான பதவி பெற்றுத் தருமாறு தமக்கு வாக்குறுதி அளித்து இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சராகவும் இருப்பவர்களின் அலுவலகங்களுக்கு தொண்டர்கள் அலைகின்றனர். எனினும் அவர்களுக்கு இதுவரை எவரும் உரிய பதிலை தெரிவிக்காது இழுத்தடித்து வருகின்றனர் என பாதிக்கப்பட்ட தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவர்கள் பணிகளை இழப்பதால் வைத்தியசாலையில் ஊழியர் பற்றாக்குறை ஏற்படும் அபாய நிலையும் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.