தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி 2023 ம் ஆண்டு மே மாதம் 23 ம் நாள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஜனநாயக ரீதியான போராட்டத்தின்போது பலாலி இலங்கை பொலிஸார் அராஜகமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு சட்டவிரோத கைதுகள் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் எட்டுப் போரினால் இலங்கை பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆயினும், காரணம் ஏதுமின்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்தில் குறித்த முறைப்பாட்டு கோவைகள் யாழ். பிராந்திய காரியாலயத்தில் இருந்து கையேற்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசாரணை எதுவும் நடை பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு காரியாலயத்தில் இன்றைய நாள் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்படாதிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது இலங்கையின் மனித உரிமைகள் குறித்த விடயதானத்தில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியிருந்த நிலையிலேயே இந்த விசாரணை இன்று (22) முன்னெடுக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.