மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு தினங்களாகப் பெய்து வந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10,716 குடும்பங்களைச் சேர்ந்த 35,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளன் என்பதுடன், 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக மாவட்டச் செயலகம், இன்று (23) தெரிவித்துள்ளது.
இம்மாதம் 21, 22ஆம் திகதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 6,680 குடும்பங்களைச் சேர்ந்த 22,496 பேரும், கோறளைப்பற்று வாகரைப் பிரதேசத்தில் 5,689 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,561 குடும்பங்களைச் சேர்ந்த 5,037 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் 402 குடும்பங்களைச் சேர்ந்த 1,285 பேரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேரும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 359 பேரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேரும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேரும், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும், போரதீவுப்பற்று வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர கிரான், செங்கலடி, வவுணதீவு பிரதேசங்களில் தலா இரண்டு வீடுகளும், வாகரை, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, மண்முனை வடக்கு, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒரு வீடுமாக மொத்தம் 10 வீடுகள் பகுதிளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையால் 124 குடும்பங்களைச் சேர்ந்த 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
இதன்படி, காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேரும், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேரும், உகன பிரதேச செயலாளர் பிரிவில் 01 குடும்பங்களைச் சேர்ந்த 03 பேரும், இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.