நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்விரு கட்சிகளும், நாடாளுமன்றத்தில் எதிரணியின் பக்கமாக இருந்தாலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனேயே இருக்கின்றன என்று தெரிவித்த விசேட பணிப்பொறுப்புகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, அவ்விருவரும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவிலயலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ்வாறான நிலையில், சுபநேரத்தில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படும் என்று அரசாங்கத் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்னர், காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமானுக்கு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்றும் அதற்கு மேலதிகமாக, பிரதியமைச்சர் பதவியொன்றும் வழங்கப்படவிருப்பதாக அத்தகவல் தெரிவித்தது.
சபை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருப்பதற்காக, மூன்று மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள ஆறுமுகன் தொண்டமான், நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளார். அதன் பின்னரே, அமைச்சுத் தொடர்பில் அறியமுடியும் என்று காங்கிரஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் அண்மையில் கொண்டுவரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது, வெளிவிவகார அமைச்சு, துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சு ஆகியவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக அறியமுடிகின்றது.
இதேவேளை, நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் சுமதிபாலவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு அமைச்சர் பதவியொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீரவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய அமைச்சுப் பதவியொன்றை அவருக்கு வழங்குவதற்கும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சரான அர்ஜுன ரணதுங்கவை, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக நியமிப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்