புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி நடத்திய, சாதிய தீண்டாமைக்கு எதிரான 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் பொதுக்கூட்டம், யாழ் நகரில், றிம்மர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (23-10-16) நடைபெற்றது. அந்த நிகழ்வில், இளைஞர் முதல் முதியோர் வரை நூறுக்கும் குறையாத பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், முகநூலில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கம்பு சுழற்றும் வீரர்கள் யாரையும் அங்கு காணவில்லை.
சில தினங்களுக்கு முன்னர், “யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளா? நம்ப முடியவில்லை!” என்று வர்க்கத் திமிருடன் பதிவிட்ட, ஜெரா தம்பி, யோ. கர்ணன் போன்ற ஊடகவியலாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப் பட்டிருந்தும் இருவரும் அங்கு சமூகமளிக்கவில்லை. அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தமோ? படியளக்கும் முதலாளிக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டாமா?
அது மட்டுமல்ல, நிகழ்ச்சி தொடர்பாக கட்சி தயாரித்த அறிக்கை, அனைத்து தமிழ்ப் ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்டிருந்தது. ஆனால், ஒரு பத்திரிகை கூட அதைப் பிரசுரிக்கவில்லை! ஆகையினால், தமிழ் ஊடகங்களை “ஆதிக்க சாதியினரின் ஊதுகுழல்” என்று அழைப்பதில் என்ன தவறு?
(Kalai Marx)