மீடூ இயக்கம் தொடர்பான மோகன்லாலின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் மீடூ இயக்கம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது. தமிழ், கன்னடம் மற்றும் இந்தி திரையுலகில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்கள்.தமிழ் திரையுலகில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்த புகார் பெரும் விஸ்வரூபாக உருவெடுத்துள்ளது. மேலும், திரையுலகில் உள்ள சிலர் “மீடூ இயக்கத்தை சிலர் ஆண்களை பழிவாங்க உபயோகப்படுத்துகிறார்கள். இது தவறானது” என்று குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் மலையாளத் திரையுலகின் நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லால் “மீடூ பேஷனாகிவிட்டது. இது விரைவில் மறைந்து விடும். இதை ஒரு இயக்கமாக பார்க்க வேண்டியதில்லை” என்று தெரிவித்தார். இக்கருத்துக்கு மலையாளத் திரையுலகில் உள்ள நடிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மோகன்லாலின் இக்கருத்து குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ், “மீடூ இயக்கம் குறித்து மோகன்லால் மிக கவனமாக பேச வேண்டும். பெண்களின் வலுவான அதிகாரமாக மீடூ மாறி இருக்கிறது. திரையுலகில் பாலியல் தொல்லைகளால் பெண்கள் வேதனைகளை அனுபவித்து வருகிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் நாம் அமைதியாக இருந்தால் குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிப்பதுபோல் ஆகிவிடும்.
மீடூ பற்றி யோசிக்காமல் மோகன்லால் பேசியுள்ளார். அவர் அந்த இயக்கத்தின் நோக்கத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். அவர் சிறந்த நடிகர் மட்டுமன்றி அறிவுபூர்வமானவர்” என்று தெரிவித்திருக்கிறார்.
மோகன்லாலுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்திருப்பதை, நடிகைகள் வரவேற்று இருக்கிறார்கள். மோகன்லால் – பிரகாஷ்ராஜ் இருவருமே இணைந்து விரைவில் வெளிவரவுள்ள ‘ஓடியன்’ படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.