ஐக்கிய அமெரிக்காவின் சிறந்த திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அங்கிகரிப்பதற்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில், நடிகை மெரைல் ஸ்ட்ரீப் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, அவருக்கெதிரான கருத்துகளை, ஐ.அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இதில், வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற மெரைல், அந்த மேடையைப் பயன்படுத்தி, ஊடகவியலாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் அங்கவீனமாவர்களுக்கும் ஆதரவான கருத்தை வெளிப்படுத்தினார்.
கடந்தாண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, அங்கவீனமான ஊடகவியலாளரைப் போன்று, டொனால்ட் ட்ரம்ப், கேலி செய்து நடித்துக் காட்டியிருந்தார். தனது உரையில், ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாது, அச்சம்பவத்தை மெரைல் குறிப்பிட்டார். “இவ்வாண்டில், ஒரு திறமை வெளிப்பாடே, என்னை வியப்புக்குள்ளாக்கியது. அது எனது இதயத்தின் கொக்கிகளை மாட்டிக் கொண்டது. அது சிறந்தது என்பதற்காகவன்று. அதில், சிறப்பாகச் சொல்வதற்கென்று எதுவுமே இல்லை. ஆனால் அது பயன்கொடுத்தது, அதன் வேலையைப் பார்த்தது. யாரை இலக்குவைத்துச் சொல்லப்பட்டதோடு, அவர்களைச் சிரிக்கவும் அவர்களது பற்களை வெளிப்படுத்தவும் வைத்தது.
“எமது நாட்டின் மிகவும் மதிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்வதற்காக முயன்ற நபர், அங்கவீனமடைந்த ஊடகவியலாளரைப் போன்று நடித்தமையே அது. தன்னை விட சிறப்புரிமையிலும் அதிகாரத்திலும் எதிர்த்துப் போராடுவதற்கான பண்பிலும் குறைந்த ஒருவரே அவர் (ஊடகவியலாளர்). அதைப் பார்த்த போது, எனது இதயத்தை அது உடைத்துக் கொண்டது” என்று குறிப்பிட்டார்.
தனக்கெதிரான விமர்சனங்களை ஏற்கும் திறனற்ற ட்ரம்ப், வழக்கத்தைப் போலவே, தனக்கு விருப்பமான ஊடகமான டுவிட்டரில், மெரைலுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தார். “ஹொலிவூட்டில் அளவுமீறி மதிப்பிடப்படும் நடிகைகளுள் ஒருவரான மெரைல் ஸ்ட்ரீப், அவருக்கு என்னைத் தெரியாத போதிலும், கோல்டன் குளோப்பில், என்னைத் தாக்கினார். மிகவும் மோசமாகத் தோற்ற ஹிலாரியின் அடிமைத்தனமான ஆதரவாளர் அவர். 100ஆவது தடவையாகச் சொல்கிறேன். அங்கவீனமடைந்த ஊடகவியலாளரை, நான் கேலி செய்யவில்லை. 16 ஆண்டுகாலப் பழைமையான செய்தியை அவர் முழுமையாக மாற்றி, என்னைத் தவறான நிலையில் காட்ட முயன்றபோது, அவர் திணறுவதைக் காட்டினேன். அதிகமான நேர்மையற்ற ஊடகங்கள்” என்று தெரிவித்தார்.
எனினும், அந்த ஊடகவியலாளரை ட்ரம்ப், கேலி செய்வது காணொளிகளில் காணப்படுவதோடு, ஊடகவியலாளரின் ஊடக அறிக்கைகளில், எந்தவிதமான தவறுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.