7 நாட்களாக முகநூலுக்குள் வரவில்லை. நான் வரவில்லை என்பதற்காக சூரியன் உதிக்காமலுமில்லை. ஆனாலும் கடந்த 25ம் திகதி பகல் 10 மணியளவில் நண்பர் சிராஜ்மஸூர் சொன்ன செய்தியும் நண்பர் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தொலைபேசியில் அழைத்த நிகழ்வும் என்னைக்கலங்கவைத்து…
என்னை விட 7 வயது இளையவர். அவரளவு கல்விப் புலமை இல்லாதவன் நான். ஆனாலும் எங்கள் நட்பில் ஒரு களங்கம் ஏற்படவில்லை யே… உரையாடல்கள் எப்போதும் தோழமையுடனே பயணித்தது..இரண்டு வருடங்களுக்கு முதல் ஒரு நாள் பேராதனை கலைப்பீடத்தின் முற்றத்தில் வைத்து நான், அவருடைய இரண்டு மக்கள் சகிதம் ஏராளமான படங்களை பிடித்தேன். கடந்த 2 நாட்களாக அந்தப் படங்களை எனது கணினியில் தேடிக் களைத்துப் போனேன்.
25 வருடங்கள் பழகிய நட்பை திடீரென காலன் அபகரித்து சென்று விட்டான். நண்பர் நுஃமான் தான் ஹஸ்புல்லாஹ்வை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கிழக்கிற்கு வரும்போதெல்லாம் எனது வீட்டிற்கு வந்து தங்கிச் செல்வது அவருக்கு ஒரு மகிழ்ச்சியான பொழுதாகவும் கழிந்தது.
எங்கள் வீட்டின் கிராமிய உணவு அவருக்கு மிகவும் பிடித்தமானது. விடிய விடிய இருவரும் பேசுவோம். தமிழ் முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைக்குரிய பிரதேசங்களை நேரில் அழைத்துப் போய் காட்டுவேன். நாங்கள் இருவரும் ஒரு தடவை எங்கள் ஊரில் உள்ள ஜமாஅத்தே முஸ்லிம் இற்கான பள்ளிவாசலில் போய் தொழுது வந்திருக்கிறோம். அந்தபள்ளிவாசலின் எளிமையில் நாங்கள் வியந்து,பள்ளியின் அமீரோடு கதைத்து வந்தோம்.
கல்குடா வாடிவீட்டில் தனக்கான அறையை ஒதுக்கி விட்டு எங்கள் வீட்டிற்கு வந்து வெறும் நிலத்தில் பாயைப் போட்டுக் கொண்டு நாங்கள் இருவரும் கதைத்த இரவுகளை எண்ணிப் பார்க்கிறேன்.
நான் கதைத்துக் கொண்டிருப்பேன் ஹஸ்புல்லாஹ் கேட்டுக் கொண்டிருப்பார். கடைசியாக அவரைப் பற்றி எழுத நிறைய உண்டு. இன்றைய தலைமுறையினர் பலரும் அறிந்த சங்கதிகள்தான்.
மறைந்த அஷ்ரப் அவர்கள் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த நேரம் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் தொடர்பில் ஹஸ்புல்லாஹ் எடுத்த முன்மொழிவுகளை அமைச்சர் நிராகரித்த போது இவரும் அமைச்சரின் ஆலோசனைகளை நிராகரித்து வெளியேறினார்.
இந்த உலகில் மரணம் மிகப் பழமையானது. ஆனாலும் ஒவ்வொரு மரணமும் புதிதாகவே நம்மை உலுக்கி எச்சரிக்கை செய்து விட்டுப் போகின்றது. எல்லா மரணமும் சமமல்ல.
மர்ஹூம் நண்பன் ஹஸ்புல்லாஹ்வின் அலைபேசி இலக்கங்கள் எனது சேகரிப்பில் இருந்து நழுவி விழுகிறது. நெஞ்சில் நண்பனுடனான நினைவுகள் மரணபந்தம் வரை சுடர்விட்டு ஒளிரும்.
நண்பனே முந்திவிட்டீர்கள். இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களோடு இணைந்துகொள்வோம்.
சிறுபான்மை இனங்களின் நலனுக்காக தனது பொழுதுகளையும் சிந்தனைகளையும் அது தொடர்பான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்த அருமை நண்பனே..! அல்லாஹ் உங்களின் அனைத்து பணிகளையும் அங்கீகரித்து அதற்கான கூலியை கப்ரிலும் நாளை மறுமையிலும் வழங்குவானாக.
(Slm Hanifa)