நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு பிரசன்னாவும், சினேகாவும் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியுள்ளது. விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் இதன் மூலம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு நடிகர்கள் பிரசன்னா- சினேகா தம்பதி ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். வேறு மாவட்டங்களில் இருந்து 10 விவசாயிகளை ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு அழைத்து வந்து இந்த தொகையை கொடுத்துள்ளனர்.
இது குறித்து நடிகர் பிரசன்னா கூறுகையில், ”டெல்லியில் விவசாயிகள் போராடி வருவதும், கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் வேதனை அளிக்கிறது. எங்களால் பெரிய அளவிலான உதவிகள் செய்ய முடியாவிட்டாலும், முடிந்த உதவியை செய்கிறோம். இது போன்று பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உதவும் வகையில் நடிகர் சங்கம் கண்டிப்பாக பணியாற்றும்” என அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் பிரசன்னா, சினேகா ஆகியோர் செயலில் இறங்கியதை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.