நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்

பல ஆண்டுகாலமாகவே மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. சில மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். பல மீனவர்கள் இலங்கை சிறையில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். மேலும் படகுகளை இழந்து பலர் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். மீனவர்கள் நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை யாழ்பாணம் மாவட்டம் மாதகல் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு விசைப்படகுகளையும், அதிலிருந்த 21 மீனவர்களையும் கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்திய- இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி நாகை மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாரைச் சேர்ந்த 50,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 2000 விசைப்படகுகள், 5000 பைபர் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.