புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் நேற்று(05) நடத்தப்பட்ட “ஜன மஹிமய” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீறி நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டினால் அவருக்கு சிறைதண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவருக்கு பிரதமர் ஆசனத்தை வழங்கப்போவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய விடுத்திருக்கும் அறிக்கைக்கு எதிராகவே மேற்கண்டவாறு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரமே நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கும், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அதிகாரம் இருப்பதாகவும், இதனை மீறி சபாநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவாராயின் அது அரசமைப்பின் 70ஆவது உறுப்புரைக்கு எதிரானது, எனத் தெரிவித்த முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார அதனை மீறி சாபநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்டினால் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்புக்குட்பட்டே பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததாக தெரிவத்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சபாநாயகர் அரசமைப்பைக்கு முரணாக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
மக்கள் பலத்தோடு சபாநாயகர் விளையாடக்கூடாது எனத் தெரிவித்த சுசில் பிரேமஜயந்த எம்.பி, புதிய சபாநாயகரைத் தெரிவுச் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெரும்பான்மையை சபாநாயகரிடம் காண்பிக்க வேண்டும் என அரசமைப்பில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என இதன்போது தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சபாநயகர் மீண்டும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு முயற்சிக்கிறார் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு சபாநயகர் நாட்டின் சட்டங்களோடு விளையாட வேண்டாம். தற்போது சபாநாயகர் ஐ.தே.கவின் சபாநாயகர் போல செயற்படுவதாகவும் கூறிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக மாநாயக்கத் தேரர்கள் மற்றும் ஏனைய மதகுருக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆகவே சபாநாயகர் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.