இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான தேர்தல், நாளை (16) இடம்பெறவுள்ளது. 234 ஆசனங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில், கரூர் மாவட்டத்திலுள்ள அரவாக்குறிச்சித் தொகுதிக்கான தேர்தல் மாத்திரம், நாளை இடம்பெறாது.
கடந்த முறை இடம்பெற்ற தேர்தலில், செல்வி ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 150 ஆசனங்களைப் பெற்று, ஆட்சி அமைத்திருந்தது. அந்தத் தேர்தலில், ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டிருந்தாலும், பின்னர் தனித்துச் சென்ற விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்குத் திராவிடக் கட்சி, 29 ஆசனங்களைப் பெற்றது. கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு 10 ஆசனங்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 ஆசனங்களும் கிடைத்தன. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், 23 ஆசனங்களைப் பெற்றது, அதனோடு இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 5 ஆசனங்களும் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு, 3 ஆசனங்கள் கிடைத்திருந்தன. மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 ஆசனங்களும் புதிய தமிழகம் கட்சிக்கு 2 ஆசனங்களும் அனைத்திந்தி போர்வேர்ட் புளொக் ஓர் ஆசனத்தையும் கைப்பற்றின.
இம்முறை இடம்பெறவுள்ள தேர்தல், இதைவிட இறுக்கமானதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆட்சியிலிருந்த அ.இ.அ.தி.மு.க மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஒருவிதமான வெறுப்பு நிலைமை, தி.மு.கவுக்கு வாய்ப்பாக அமையக்கூடும். ஆனால், இதற்கு முன்னைய தி.மு.க ஆட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து, மக்களின் எண்ணங்களை மாற்றுவது, அக்கட்சிக்குச் சவாலான ஒன்றாகக் கருதப்படுகிறது.
தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியன இடம்பெற்றுள்ளன. அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகியன இடம்பிடித்துள்ளன.
மக்கள் நலன் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியன இடம்பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாரதிய ஜனநாயகக் கட்சியும் (பி.ஜே.பி) இந்திய ஜனநாயகக் கட்சியும் இடம்பெற்றுள்ளனன. ஏனைய கட்சிகளில் நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி போன்ற முக்கிய கட்சிகளாக உள்ளன.
இதுவரை வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளில், ஆட்சியமைக்கத் தேவையான 150 ஆசனங்களைப் பெறுவதற்கு, பிரதான கட்சிகளடங்கிய கூட்டணிகள் இரண்டுமே, தடுமாறுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வாக்குகளுக்காகப் பணம் வழங்கும் நடவடிக்கையில், பிரதான இரண்டு கட்சிகளுமே ஈடுபட்டுள்ளதாக மாறி மாறிக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு, பாரத ஸ்டேட் வங்கிக்கெனக் குறிப்பிடப்பட்டு, 570 கோடி ரூபாய்களைச் சுமந்துசென்ற மூன்று கொள்கலன் வாகனங்கள், தேர்தல் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. குறித்த வாகனங்கள், பாரத ஸ்டேட் வங்கியினுடையன என்று ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், உரிய ஆவணங்களைக் கொண்டு சென்றிருக்கவில்லையெனத் தெரிவித்தே இவை தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரவாக்குறிச்சி தொகுதியில், பணம் வழங்கப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, எதிர்வரும் 23ஆம் திகதிக்குத் தேர்தல் முடிவுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதோடு, அத்தொகுதிக்கான இறுதி முடிவு, 25ஆம் திகதி வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.