மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள், விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
12-வது நாளாகத் தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமுகமான தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி நாளை (8-ம் தேதி) விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கு ஏற்கெனவே டிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சிவசேனா, திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேலைநிறுத்தத்துக்கு 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பாரத் பந்த் நடக்கும்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவமாறு மத்திய உள்துறை அமைச்சகம், மாநிலங்களையும், யூனியன் பிரேதசங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
”விவசாயிகள் சார்பில் 8-ம் தேதி எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் நடத்தப்படும் பாரத் பந்த்தின் போது, நாடு முழுவதும் அமைதியையும், நிலைத்தன்மையையும் உறுதி செய்ய மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதையும் , சமூக விலகலைப் பின்பற்றுகிறார்களா என்பதையும் கண்காணித்து அதை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் அமைதியும், நிலைத்தன்மையும் பராமரிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த ஆளும் அரசுகள், நிர்வாகங்கள் எடுக்க வேண்டும்”.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.