சுதந்திரத்தின் பின்னர் இலங்கை குடியியல் குழப்பங்கள், அரசியல் அமைதியின்மைகள், இன மோதல்கள் மற்றும் நீண்டகால ஆயுத மோதல்கள் போன்ற வரலாறுகளுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் அனைத்து இன, மத, தொழில் மற்றும் ஏனைய தனித்துவங்களைக் கொண்ட பிரஜைகள் அவ்வாறான அபாயங்களுக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.
இன ரீதியான, மத ரீதியான, அரசியல் ரீதியான கருத்தாக்கங்கள் அல்லது வேறு காரணங்களின் அடிப்படையில் எந்தவொரு வகையான மோதல்களும் மக்களின் நல்வாழ்க்கையில் மிகவும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன், தேசத்தின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாகவும் அமைகின்றமை கடந்தகால கசப்பான அனுபவங்கள் எமக்குப் பறைசாற்றுகின்றன.
எவ்வாறாயினும் மக்களின் அமைதியையும் பாதுகாப்பையும் ஆபத்துக்குள்ளாக்கி சமூக பொருளாதார கட்டமைப்புக்களை சீரழிக்கின்ற அத்தகைய சம்பவங்கள் அடிக்கடி தோன்றுகின்ற போக்குகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
2018 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டத்தின் மூலம் நினைவேந்துகை மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் கூட்டாக இழப்புக்களை வழங்குவது அழுத்தங்களுக்கு உள்ளாகிய நபர்களின் சமூகங்களுக்கும் குழுக்களுக்கும் ஏதுவான வகையிலான உரிமை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்த பொதுமக்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் அலுவலர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் நினைவு கூறுவதற்கான நினைவகத்தை நல்லிணக்கம் மற்றும் மீளிணைப்பின் அடையாளமாக கொழும்பு நகரில் பொருத்தமன இடமொன்றில் நிர்மாணிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.