‘நியூசெஞ்சுரி’ இராதாகிருஷ்ணன் காலமானார்!

வி.இராதாகிருஷ்ணன் கோவை மாவட்டம்> பொள்ளாச்சி நகரில் வணிக குடும்பத்தில் பிறந்தவர். பள்ளியில் பயின்று வந்த காலத்தில் தீவிரமடைந்த விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட பல முறை சிறை தண்டனை பெற்று பொள்ளாச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட பல சிறைகளில் இருந்தவர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்கள் கே. பாலதண்டாயுதம், சி.ஏ. பாலன், ஆர்.கே.கண்ணன், ஆர்.கே. பாண்டுரங்கன் ஆகியோருடன் ஏற்பட்ட தோழமை உறவால் கம்யூனிஸ்ட் கொள்கை வழியை தேர்வு செய்தவர். தனது இறுதி மூச்சு வரை கொள்கை வழிப் பயணத்தை உறுதியுடன் மேற் கொண்டவர். ஆரம்ப காலத்தில் கட்சி தலைவர்கள் பி.சி.ஜோஷி, அஜாய் கோஷ், எஸ்.ஏ.டாங்கே, என்.கே.கிருஷ் ணன், ராமேஸ்வர ராவ், பார்வதி கிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம் உரையை மொழியாக்கம் செய்தவர்.

அப்போது கட்சியில் இருந்த மற்றொரு இராதாகிருஷ்ணன் இவரை விட உயரமாக இருந்ததால் இவரை ‘சோட்டா இராதா’ என அழைத்து வந்தனர். அந்த பெயர் நிலைத்து விட்டது.

‘ஜன சக்தி’ இதழில் ஆரம்ப காலம் முதல் பல பத்தாண்டுகள் மொழி பெயர்ப்பாளராக தொடர்ந்து பணியாற்றியவர். பல இளம் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளித்து உதவியவர்.

சோவியத் நாடு அலுவலகத்தில் ‘சோவியத் பலகணி’ மாத இதழ் பொறுப்பாளராக பணிபுரிந்தவர். ரயில்வே தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த மோட்சமேரியை திருமணம் செய்து கொண்டார். அவர் சில வரு டங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கீதா, டாக்டர் சாந்தி, பாரதி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர்.