அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு, நிர்க்கதிக்கு உள்ளான மக்களுக்கு நிரந்தரமான வருமான வழி கிடைக்கும் வரையிலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளு -மாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை குறித்து ஆராய்வதற்கான விசேட கூட்டம், இரத்தினபுரி பிரதேச செயலகத்தில், ஜனாதிபதி தலைமையில் நேற்று (29) இடம்பெற்றது. இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவுரை வழங்கியுள்ளார். அத்துடன், நிதி உதவிகள் அவசியமாயின் உடனடியாகத் தெரிவிக்குமாறு மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, விசேடமாக படகுகளினால் அண்மிக்க முடியாத உயிர் அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார்.
சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்துக்கு உள்ளான இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகளின் ஒவ்வொரு துறை தொடர்பாகவும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்ந்தபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள் மற்றும் ஆடைகள் தொடர்பாக தொடர்ச்சியாக கண்காணித்து அவற்றைப் பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பாக விசாரித்து அறிந்த ஜனாதிபதி, நீர் வழிந்தோடியதன் பின்னர் மக்களின் வசிப்பிடங்களையும், கிணறுகளையும் சுத்தம் செய்வதற்காக பின்பற்றவுள்ள முறை தொடர்பாகவும் விசாரித்தார்.
அதேபோல் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதில் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினரின் உதவியையும் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
மக்களின் வாழ்வாதார வழிகள் மீண்டும் உறுதி செய்வதற்கும் சலுகை ரீதியான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.
அனர்த்தத்துக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு உலக நாடுகள் பல முன் வந்துள்ளதுடன், இந்தியாவிலிருந்து நிவாரணக் கப்பல்கள் இரண்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
அனர்த்தத்திற்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தமது பொறுப்புகளை, சர்வதேசத்தில் அனைவரது ஒத்துழைப்புடன் அரசாங்கம் நிறைவேற்றுமெனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
“இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான இடங்களில் புதிய வீடுகளை விரைவில் அமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். மேற்படி இரண்டு மாவட்டங்களிலும், நீர் மற்றும் மின்சாரம், வீதி, தொலைபேசி உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் விரைவில் வழமைக்கு கொண்டுவருவதற்கு, சகல தரப்பினரும் பணியாற்றி வருகின்றார்கள்.
அத்தோடு, சேதமாகிய வீதிகள் மற்றும் பாடசாலைகள், அரச நிறுவனங்கள் உட்பட அனைத்து சேதம் விவரங்கள் அடங்கிய கணக்கெடுப்பு அறிக்கையை, கொழும்பில் நாளை (இன்று) (30) நடைபெறும் தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைக்கு பெற்று கொடுங்கள்” என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.