இதனால் சமீப காலமாக மிகவும் இருள் நிறைந்த நிலவின் தென் துருவம் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. அந்த குறிப்பிட்ட பகுதியை அடைவதற்காக அமெரிக்கா, சீனா உட்பட பல்வேறு நாடுகள் முயற்சிசெய்து வருகின்றன. குறிப்பாக, 2024-ம் ஆண்டில் சீனா தென்துருவத்தில் ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல், அமெரிக்காவும் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு நிலவில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டிகள் வல்லரசு நாடுகளுக்கு இடையே நடைபெறும் சூழலில்தான் தென் துருவத்தில் சந்திரயான் -2 விண்கலத்தை தரையிறக்க இந்தியா திட்டமிட்டது. அந்த வாய்ப்பு இறுதிகட்டத்தில் கைநழுவியது பெரும் ஏமாற்றமாகியுள்ளது. ஏனெனில், இந்த திட்டம் வெற்றி அடைந்திருந்தால் நிலவை பற்றிய பல அரிய ரகசியங்கள் வெளியுலகுக்கு இந்தியா மூலம் தெரிய வந்திருக்கும். சர்வதேச விண்வெளி அரங்கில் நமக்கான வர்த்தக மதிப்பும் உயர்ந்திருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் குவியும் ஆதரவு
இந்தியாவின் நிலவு பயணத் திட்டம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாவிட்டாலும் இஸ்ரோவுக்கு ஆதரவாக பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் ஆதரவுகள், வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, இளைஞர்கள் சந்திரயான்-2, இஸ்ரோவால் பெருமை அடைகிறோம் ஆகிய பெயரில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதை வலைதளங்களில் அதிகம் டிரண்ட் செய்து வருகின்றனர். இந்நிகழ்வை மக்கள் மிகவும் நேர்மறையாக எடுத்துக் கொண்டது விஞ்ஞானிகளுக்கு பெரும் ஆறுதலாகியுள்ளது.