நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு காணும் முயற்சிகள், மீள்குடியேற்றம் மற்றும் காணிகள் விடுவிப்பு போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுபினை நத்தி உறுதியளித்தார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(08) நடைபெற்ற பிரதான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார். ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து ஐ.நா இலங்கைக்கு உதவி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு வருடத்தில் இலங்கை பாரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. மாற்றங்கள் சரியான பாதையில் செல்வதற்கான நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தபோது நாட்டுக்கு பல உறுதி மொழிகளை வழங்கியிருந்தார். தேர்தல் சரியான முறையில் நடத்துவது என்ற பாரியசுமை அவருடைய தோள்களில் சுமத்தப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் நாட்டை மறுசீரமைப்பு பாதையில் முன்கொண்டு செல்லுமாறு மக்கள் ஆணை வழங்கியிருந்தனர்.
நீண்டகால சமாதானத்துக்கும், நல்லிணகத்திக்கும் அடித்தளமிடுமாறு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். 19ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டதுடன், சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம், உரிமைகளை பாதுகாத்து, நாட்டை ஜனநாயக ரீதியாக ஆட்சிசெய்வதற்கான திறமை அரசாங்கத்துக்கு உள்ளது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டில் நீண்டகால சமாதானத்தையும், நல்லாட்சியையும் உறுதிப்படுத்துவதற்கு ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். கடந்த சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றியபோது வடக்கு, தெற்கில் உள்ள மக்களின் மனங்களை வெல்வதே தேசிய நல்லிணக்கத்துக்கு அவசியம் என்று கூறியிருந்ததுடன், இதற்கு அரசு எதிர்கொள்ளும் சவால்களையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
நல்லிணக்க செயற்பாட்டில் முன்நகர்ந்து செல்வதற்கும், காணிகளை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். கடந்த 12 மாதங்களாக இலங்கை ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி கூறினார்.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு ஐ.நா செயலாளர் நாயகம் விடுத்திருக்கும் அறிக்கையில் முன்னேற்றகரான செயற்பாடுகளைப் பாராட்டியிருந்ததுடன், இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி வழங்கத் தயார் என்ற விடயத்தைக் குறிப்பிட்டிருப்பதாகவும் சுபினை நந்தி தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.