நீதிமன்ற வளாகத்திற்குள்…. வரவேண்டிய கார் வரவில்லை

இது குறித்து அவர் வழங்கிய வாக்குமூலத்தில்,…

கொலை செய்வதற்கு பல நாட்களுக்கு முன்பு துப்பாக்கிதாரி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை விசாரணைகளின் போது பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதாள உலக உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொன்றதாக அவர் தெரிவித்தார். 

துப்பாக்கிதாரி, இந்தக் கொலை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 200,000 ரூபாய் ஊதியமாக தனக்கு வழங்கியதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். 

நீதிமன்ற வளாகத்திற்குள் சம்பந்தப்பட்ட பெண் துப்பாக்கியை தன்னிடம் கொடுத்த பிறகு, அதை தனது இடுப்புப் பட்டையில் மறைத்து வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. 

அந்தப் பெண்ணை சிறிது காலமாகத் தெரியும் என்றும், அதனால் அவருடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, வாடகை வாகன செயலி மூலம் வாடகைக்கு வாகனம் ஒன்றை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு அருகில் இருந்து நீர்கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பகுதிக்குச் சென்றதாக சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் மேலும் ஒப்புக்கொண்டுள்ளார். 

தன்னை அழைத்துச் செல்ல கார் ஒன்று அவ்விடத்திற்கு வருவதாக கூறிய போதும் அவ்வாறு வாகனங்கள் எதுவும் வராததால் இவ்வாறு செய்ததாகக் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியுள்ளார். 

பின்னர் துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணுடன் கடை ஒன்றுக்குச் சென்று ஆடைகளை வாங்கியதாக அவர் கூறினார். 

பின்னர் நீர்கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து வாடகைக்கு எடுத்த வேனில் கல்பிட்டிக்கு பயணம் செய்து, இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாரானதாக அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார். 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், தன்னிடம் இருந்த போலி அடையாள அட்டைகள் அனைத்தும் அவிஷ்க என்ற குற்றவாளியால் தயாரிக்கப்பட்டவை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். 

அதேபோல், கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலையை தானே செய்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply