சுன்னாகம் கழிவு ஒயில் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அழைப்பாணை விடுக்கப்பட்டபோதிலும் நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. கழிவொயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென அப்பிரதேசங்களைச் சேர்ந்த இருசுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில், குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது கடந்த வழக்குத் தவணையின்போது வடமாகாண விவசாய அமைச்சர் பொ .ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டபோதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இந்த நிலையில் வழக்கு அடுத்த மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சர் வேறொரு நிகழ்விற்குச் சென்ற காரணத்தால் அவர் வருகை தர முடியவில்லை என வடமாகாண சபையின் அபிவிருத்தி அலுவலர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் கடிதமொன்றைச் சமர்ப்பிக்க முற்பட்டபோதும், நீதவான் அதனை நிராகரித்து பிடிவிறாந்து பிறப்பிக்க முற்பட்ட நிலையில் அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ.சி.வரதராஜா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது பொதுமக்கள் நலன் சார்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், சட்டத்தரணிகளான சோ.தேவராஜா, கே.சுகாஷ், சோபிதன், பி .பார்த்தீபன் ஆகியோரும் வடக்கு மாகாண சபையின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ .சி. வரதராஜாவும் ஆஜராகியிருந்தனர். இதன் போது சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ.சி. வரதராஜா, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகிப்பது தொடர்பில் கதைப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் வடமாகாண சபைக்கு இல்லையெனவும், இந்த அதிகாரம் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கே உள்ளதாகவும் மன்றுக்குத் தெரியப்படுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அதிகாரமில்லாத ஒரு சபை நீர் மாசு தொடர்பான ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி அறிக்கையை ஏன் தயாரித்தது? அந்த அறிக்கையை ஏன் வெளியிட்டது? என வினாவினார். கடந்த வழக்குத் தவணையின் போது வடமாகாண அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர், நீர் மாசால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர்கள் ஆகியோரும் இம் முறை வழக்குத் தவணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கைகள் சமர்ப்பித்திருந்தனர்.
ஏற்கனவே ஐந்து கிணறுகளில் ஈயம் கலந்திருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்திருந்தது. அந்தக் கிணறுகள் யாருடைய கிணறுகள் என வினாவப்பட்ட நிலையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அது தொடர்பான விபரங்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள். குறித்த விபரங்களை சுகாதாரப் பரிசோதகர்கள் பெற்று அதற்குரிய நடவடிக்கையை எடுப்பார்கள். அடுத்த வழக்குத் தவணையின் போது வடமாகாண விவசாய அமைச்சர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் நீதிபதி பணித்துள்ளார்.