ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிய மாநாடு மாலை 5.30க்கு நிறைவடைந்தது.
இந்த மாநாட்டில், வடக்கு, கிழக்கு, தெற்கைச் சேர்ந்த சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள், அணிதிரண்டு பங்கேற்றனர். ஆகையால், அந்த மைதானம் மட்டுமன்றி குருநாகல் நகரமே நீலக்கடலாகக் காட்சியளித்தது. கூட்டம், பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய மும்மத ஆசீர்வாதத்துடன் ஆரம்பமாகியது. கிறிஸ்தவ ஆசீர்வாதம் வழங்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் போஷகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமரும் போஷகருமான டி.எம்.ஜயரத்ன ஆகியோரும் பங்கேற்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவரும் எம்.பியுமான முத்து சிவலிங்கம், பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான பிரபா கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் பங்கேற்றிருந்தார்.
இந்த மாநாட்டுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக, சுமார் 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, ஏற்கெனவே அறிவித்திருந்தது போல, முன்னாள் ஜனாதிபதி வழிநடத்தும் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும், நேற்றைய மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.