அனைத்துச் சத்துக்களும் அடங்கிய சமச்சீரான உணவானது நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கச்செய்வதோடு, நாட்பட்ட நோய்களுக்கும் தொற்றுநோய்களுக்குமான வாய்ப்புகளைக் குறைக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதை மக்களிடம் அரசு பேசுவதோடு, எளிய மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு இந்நாட்களில் கிடைப்பதற்கான செலவையும் கரோனாவை எதிர்கொள்ளும் செலவோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.
கரோனா தொற்றுக்கு உள்ளாகும் அத்தனை பேருமே கடும் பாதிப்புக்கு ஆளாவதில்லை; கடும் பாதிப்புக்கு ஆளாகும் அத்தனை பேருமே உயிரிழந்துவிடுவதுமில்லை. ஆக, கரோனா தொற்றை எதிர்கொள்வதில் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது.
நோய்த் தடுப்பில் ஊட்டச்சத்துக்கு மிகவும் முக்கியமான பங்கு இருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் உணவுப் பரிந்துரைகள் தொடர்ந்து சுட்டுகின்றன. நல்ல நாட்களிலேயே உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துகள், நுண்சத்துகளைப் பெறுவதற்கு நாள்தோறும் குறைந்தபட்சம் இரண்டு கிண்ணம் பழ வகைகளையும், இரண்டரை கிண்ணம் சமைக்கப்படாத காய்கறிகளையும், 180 கிராம் பருப்பு வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அது பரிந்துரைக்கிறது.
உலகிலேயே ஊட்டச்சத்து குறைவானவர்கள் மிகுந்த நாடு இந்தியா என்பதால், இப்போது இதுபற்றி யோசிப்பது முக்கியமானதாகிறது. 2015 நிலவரப்படி இந்தியாவில் ஆறு வயதுக்குட்பட்ட 1.98 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏறக்குறைய 36% பேர் எடைக்குறைவோடு காணப்படுகிறார்கள்; 58% குழந்தைகளிடம் ரத்தசோகை காணப்பட்டது. அதேபோல், 12-51 வயதுப் பெண்களில் 51.4% பேர் ரத்தசோகையர்கள். சி.ரங்கராஜன் குழு அறிக்கையின்படி இந்தியாவில் ஏறக்குறைய 36.3 கோடிப் பேர் வறுமையில் இருக்கிறார்கள். மக்கள்தொகையில் இது அன்றைய கணக்கில் 29.5%. அதாவது, ஒன்று அல்லது இரண்டு வேளை அரைகுறையாகச் சாப்பிட வாய்ப்புள்ளவர்கள். நிச்சயம் ஒரு வேளை பட்டினி.
நோய்த் தடுப்புக்கான முன்னேற்பாடுகள் எவ்வளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு நோயை எதிர்கொள்வதற்கான திட்டமிடலும் அவசியம். அரசு இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வையும் எளியோருக்குத் தேவையான உதவியையும் வழங்குவது அவசியம். அவசரம்.