இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து கடந்த 2018ஆம் ஆண்டு மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தியதால் இந்த இடஒதுக்கீடு முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பங்களாதேஷ் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஜனவரி மாதம் நடந்த பொதுதேர்தலில் அவாமீ லீக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அவாமீ லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா 8வது முறையாக அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் பங்களாதேஷ் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மீண்டும் கொண்டு வர ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதனால் பங்களாதேஷ் மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் குதித்தனர்.
தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் மாணவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
மேலும் போராட்டத்தின் உச்சகட்டமாக மாணவர்கள் அரசு தொலைக்காட்சி நிலையத்தை முற்றுகையிட்டு தீ வைத்தனர். டாக்காவின் வடக்கே நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலைக்கும் தீ வைக்கப்பட்டது. இதை பயன்படுத்தி 800க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர்.
மாணவர்கள் போராட்டம் காரணமாக பங்களாதேஷ் போர்க்களம் போல் மாறியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, பாடசாலை, கல்லூரிகளுக்கு கால வரையின்றி விடுமுறை அளித்துள்ள அரசு போராட்டக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.
வன்முறை மேலும் பரவால் தடுக்க செல்போன், இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் அங்கு, அமைதியற்ற சூழல் நிலவுகிறது. கடந்த 16ஆம் திகதி முதல் நடந்து வரும் வன்முறை போராட்டங்களில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.
இதனிடையே, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டை இரத்து செய்து, அதனை 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி பங்களாதேஷ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு அடுத்த மாதம் விசாரணைக்கு வர இருந்த நிலையில் மாணவர்களின் தீவிர போராட்டம் காரணமாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “அரசு பணிகளில் தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களுக்கு இடஒதுக்கீட்டில் 93 சதவீதமும், உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்தும், மேலும் 2 சதவீதத்தை சிறுபான்மையினர், மாற்று திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வழங்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தவிட்டனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து அந்நாட்டில் மீண்டும் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது