எமது முதலாவது பொதுவெளி கலந்துரையாடலானது நேற்று (06/01/2019) காலை 10.00 மணியளவில் பருத்தித்துறை ஞானாலயத்தில் ஆரம்பமாகியிருந்தது. இக் கலந்துரையாடலானது சூழலியல் சார்ந்த மற்றும் இயற்கை வேளாண்மை, மியோவாக்கி காடுகளின் தேவைப்பாடுகள் பற்றி கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த விடயம்சார் அனுபவமுள்ளவர்களையும், அமைப்பினரையும், நலன்விரும்பிகளையும் உள்ளடக்கி தொடர்ந்திருந்தது.முதலில் இப்பொதுவெளி கலந்துரையாடலுக்கான தேவை பற்றி வசீகரன் குறிப்பிட்டிருந்துடன் எமது அமைப்பின் நோக்கம், செயற்பாடுகள், எதிர்கால திட்டங்கள் பற்றி ரஜிதா குறிப்பிட்டிருந்தார்.
அடுத்து, சூழலியல் சார்ந்த செயற்பாடுகளின் தேவையும், அமைப்புக்களினுடைய வகிபாகமும் என்கின்ற விடயம் தொடர்பிலான விளக்கமொன்றை க.தணிகாசலம் குறிப்பிட்டிருந்தார்.
இதில், இயற்கைக்கு சொந்தமான நாம் அனைவரும் தற்போது இயற்கைக்கு அந்நியமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் இவை தொடர்பான மாற்றங்களை உள்வாங்கி சரியான முறையில் செயற்பட வேண்டுமென்பதுடன், தொழிற்சாலைகளின் வருகைகளால் அலங்கோலமாகிய கிராமங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தல் பற்றியும் ஆரம்பகால கட்டத்தில் காணப்பட்ட சூழலியல் மூலதனங்களை சிறப்பாக பேணுதலுடன் தேவையற்ற நுகர்வுகளை குறைத்துக்கொள்ளல் என்பதுடன் ”99 வீதம் நாங்கள் என்கின்ற இயக்கம்” எனும் பதத்திலிருந்தான விளக்கத்தினடிப்படையில் மக்கள் வர்க்கமானது சூழலியல் சார்ந்த பரந்த சிந்தனை இயக்கமாக செயற்படக்கூடியதான வாய்ப்பு காணப்படுகின்ற நிலையில் மிகச்சிறந்த மாற்றமொன்றை கொண்டுவர முடியும் எனவும், சூழலியல் சார்ந்த போராட்டங்களின் மூலம் சூழல் சார்ந்த விழிப்புணர்வுகளை மேற்கொள்ள முடியுமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்விடயங்கள் தொடர்பில் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இதனடிப்படையில் தத்தமது மாற்றங்களினூடாக அனைவரும் சிறந்த பொது மாற்றமொன்றை ஏற்படுத்திக்கொள்ளலாம் எனவும், சூழலியல் சார்ந்த போதிய விளக்கங்களினூடாக முறையான விழிப்புணர்வு செயற்பாடுகள், அறிவுச்சொத்துக்களை இனம்காண்பதன் மூலமாக அனுபவங்களினூடாக அமைப்பினை கொண்டு நடாத்தல், அறிவார்ந்த முறையில் அமைப்பின் செயற்பாடுகளை மேற்கொள்ளல், போராட்டங்களினூடாக அமைப்புகள் பணியாற்றுகையில் வழிநடத்தக்கூடிய/ கற்பிக்கக்கூடிய விடயங்கள் தொடர்பில் கிரிஷாந் குறிப்பிட்டிருந்ததுடன், இடம்பெறுகின்ற போராட்டங்கள், விழிப்புணர்வு செயற்பாடுகளை பதிவு செய்ய வேண்டியதனூடாக எதிர்கால சந்ததியினருக்கு மற்றும் ஏனையோருக்காக எழுத்து வடிவிலோ அல்லது ஏதேனும் பதிவுகளினூடாகவோ பேணவேண்டிய வேண்டிய கடமைப்பாடு இருக்கின்ற விடயத்தை ஜதார்த்தன் முன்வைத்திருந்தார். இதற்காக ஆவணப்படங்களை உருவாக்கி கொள்ளலாம் என்பதுடன், அத்தனை சமூகத்தினரையும் உள்வாங்கி செயற்படக்கூடிய வழிமுறைகளை தீர்மானித்துக்கொள்ளல் போன்றதான யோசனையை கிரிஷாந் குறிப்பிட்டிருந்தார்.
திசைமாறி போய்கொண்டிருக்கின்ற உலகச்சூழலில் மாற்றம் வேண்டுமென்கின்ற நிலையில் இயற்கையியலின் தேவைப்பாடுகள், சூழலியல் மாற்றங்களை நமது செயற்பாடுகளினூடாக துரித கதியில் மேற்கொள்ளண்டியதான கடமைப்பாடும் அனைவருக்கும் உள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அடுத்து, இயற்கை விவசாயம் தொடர்பாக இயற்கை வழி செயற்பாட்டாளர் சிவநேசன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
அதன்படி, உரப்பாவனைகள் அற்ற சேதன முறையில் பாரம்பரிய வேளாண்மை செயற்பாடுகளை செய்தல், இயற்கையோடு ஒன்றித்து வாழுகின்ற உயிரினங்களை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை செய்யாமல் அவற்றை இயல்பாக வாழ வழிவகைகளை மேற்கொள்ளல், பாரம்பரிய உணவு வகைகளை, மண்ணிற்கான பழ வகைகளை மீள உணவுப்பழக்கவழக்கத்திற்குள் கொண்டுவரல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தது.
தொடர்ந்து, எம்முயற்சிக்கான வாழ்த்துதல்களோடு, மூன்றாம் உலக யுத்தமானது நீரிற்காக இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆய்வுகளின் மூலமாக கூறப்பட்டு காணப்படுகின்ற நிலையில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தல், வைபவ நிகழ்வுகளில் குளிர்பானங்களை தவிர்த்து உள்ளூர் உற்பத்தி பானங்களை வழங்குதல், உள்ளூர் உற்பத்திகளை பரவலாக பயன்படுத்தத்தூண்டுதல் போன்ற அபிப்பிராயங்களை கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த முன்னாள் வங்கி முகாமையாளர் ஒருவரும் முன்வைத்திருந்தார்.
இறுதியாக ”மியோவாக்கி காடுகள் உருவாக்கம் செய்தல்” என்கின்ற விடயம் தொடர்பில் விவசாய ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த நடேசன் குகதாசன் விளக்கமொன்றை வழங்கியிருத்தார்.
இதனூடாக குறிப்பிடத்தக்க பகுதிகளில் சிறு காடாக்கல் முயற்சிகளினூடாக பலதரப்பட்ட பிரதேசங்களுக்கே உரித்தான மரங்களை வளர்த்தல், அதனூடே பல்வகைப்பட்ட பழ மரங்களையும் உள்ளடக்கி கொள்ளல், இவற்றை தழுவி வாழுகின்ற உயிரினங்களினூடாக, பறவைகளினூடாக சுயமான காடக்கல் ஒன்று தூண்டப்படும் என்கின்ற விடையத்தையும் மியோவாக்கி காடுகள் என்பது பற்றியதான அறிமுக விளக்கத்தையும் வழங்கியிருந்தார்.
இவ்வாறாக சிறந்த, முழுமையான கலந்துரையாடலாக பலதரப்பட்ட விடயங்களின் அலசலோடு இடம்பெற்றிருந்ததுடன், கலந்துகொண்டிருந்தவர்களுக்கு கமநல திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட சீத்தா மரக்கன்றுகள் இவ்விரண்டு வழங்கிவைக்கப்பட்டு முதல் பொதுவெளி கலந்துரையாடலான போதிலும் திருப்திகரமானதாக இடம்பெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
-பசுமைச் சுவடுகள்-