பாலிவுட்டின் வசூல் மன்னன் சல்மான் கான் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை அந்த பண்ணை வீட்டில் தான் பார்ட்டி நடத்தி கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற தனது 56வது பிறந்தநாளையும் நடிகர் சல்மான் கான் அங்கே தான் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பண்ணை வேலைகளை செய்வதிலும் சல்மான் கான் மிகவும் விருப்பம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 27ம் தேதி தனது 56வது பிறந்தநாள் விழாவை கொண்டாட தனது பண்ணை வீட்டுக்கு சென்ற நடிகர் சல்மான் கான் அதற்கு முன் தினம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த நிலையில் அவரை ஒரு பாம்பு தீண்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்று சிகிச்சை அளித்த நிலையில், விஷம் குறைவான பாம்பு என்றும் சல்மான் கானுக்கு ஒன்றும் நேரவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில், தற்போது நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் ஏகப்பட்ட நடிகர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக அவரது பண்ணை வீட்டுக்கு அருகே இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் கேத்தான் கக்கட் குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளார். இருவருக்கும் இடையே ஏற்கனவே கருத்து மோதல் காரணமாக அவதூறு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படியொரு குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்.
நடிகரின் பெயரையும் அவரது பணியையும் கெடுக்கும் விதமாக இதுபோன்ற உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை அவர் பரப்பி வருகிறார் என சல்மான் கானின் வழக்கறிஞர் பிரதீப் காந்தி கூறியுள்ளார். பண்ணை வீட்டுக்கு அருகே செல்லும் சாலையின் வழியை சல்மான் கான் அடைத்ததில் ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு காரணம் என்றும் கூறுகின்றன்ர். ஆனால், சல்மான் கானின் பண்ணை வீட்டை சோதனை போட வேண்டும் என அவரது பக்கத்து வீட்டுக்காரர் சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்டு வருகிறார்.
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் 1978ம் ஆண்டு வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்தின் கதையை சல்மான் கானின் பக்கத்து வீட்டுக்காரர் ஓட்டுகிறார் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த படத்தில் இளம் பெண்களை கொலை செய்து தனது தோட்டத்தில் புதைத்து அதற்கு மேல் ஒரு ரோஜா செடியை திலீப் கதாபாத்திரத்தில் நடித்த கமல் நட்டுவிடுவார்.