பிரேஸிலின் ஜனாதிபதி டில்மா றூசெப், வரவு செலவுத் திட்டத்தை கையாண்டமை காரணமாக, அவரை பதவியிலிருந்து அகற்ற பிரேஸில் செனட் வாக்களித்துள்ளது. றூசெப்புக்கு எதிராக, 66, செனட்டர்களும் ஆதரவாக 20, செனட்டர்களும் வாக்களித்த நிலையில், றூசெப்பை பதவியிலிருந்து அகற்றுவதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மையை செனட் பெற்றிருந்தது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வரை உள்ள றூசெப்பின் மிகுதிப் பதவிக் காலத்தில், இடைக்கால ஜனாதிபதியாக தற்போது பதவி வகிக்கும் மைக்கல் தெமர் பதவி வகிக்கவுள்ளார். மத்திய வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த தெமர், இலங்கை நேரப்படி இன்று காலை பதவியேற்கவுள்ளார்.
றூசெப்புக்கெதிரான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என செனட் வாக்களித்தைத் தொடர்ந்து றூசெப், கடந்த மே மாதமே பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது, முழுமையாக பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.
பிரேஸிலியச் சட்டத்தின் கீழ், சட்டவிரோதமாகக் கருதப்படும், அரசாங்க வரவு செலவுத் திட்டங்களிடையே நிதியை நகர்த்தினார் என்பதே றூசெப் மீதான குற்றச்சாட்டாகும்.