‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்றால் அதற்கு இணையான அல்லது நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான புதிய பலமான சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படாது’ என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச்சட்டம் அகற்றிக்கொள்ளப்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். நீதியமைச்சுடன் வெளிவிவகார அமைச்சு இணைந்து புதிய சட்டமொன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் முதற்கட்ட வரைபுப் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தை உருவாக்கத் தேவையான நிபுணத்துவப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகளுடைய ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்தாலும் பொருளாதார, தொழில்நுட்ப ரீதியாக பயங்கரவாதம், சர்வதேசத்தில் தலையெடுத்துள்ளது.
சாதாரண சட்டமொன்றை உருவாக்கி, நாடாளுமன்ற அனுமதியுடன் அமுலாக்க 8 மாதங்கள் வரை செல்லுகின்ற நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கான பாரிய சட்டத்தை உருவாக்க நீண்ட காலம் எடுக்கும். அவசரமாக அரைகுறையான சட்டத்தை உருவாக்க முடியாது.
அதனைபோல, அவசரப்பட்டு பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை நீக்கி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளிக்க முடியாது’ என்று அவர் மேலும் கூறினார்.