தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உப தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர்(எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா) மற்றும் கஜன் மாமா (ரெங்கசாமி கனகநாயகம்) ஆகிய இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை(06) கைது செய்யப்பட்டுள்ளனர். 2005ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரையும் இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகள் கொழும்பில் இடம் பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.